வெடிவிபத்து குறித்து மாவட்ட வருவாய் அலுவலர் நேரில் ஆய்வு


வெடிவிபத்து குறித்து மாவட்ட வருவாய் அலுவலர் நேரில் ஆய்வு
x

வாணியம்பாடி அருகே பட்டாசு கடையில் ஏற்பட்ட வெடி விபத்தில் தந்தை- மகன் பலியான சம்பவம் தொடர்பாக மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

திருப்பத்தூர்

மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி புத்துக்கோவில் அருகில் உள்ள ஈச்சங்கால் பகுதியை சேர்ந்தவர் குமார். பட்டாசு கடை நடத்தி வருகிறார். இவருடை மகன் தயாமூர்த்தி (வயது 8). பட்டாசு கடையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் குமார், அவரது மகன் ஆகியோர் உடல்கருகி பலியானார்கள்.

சம்பவம் நடைபெற்ற பகுதிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார். விபத்து நடைபெற்ற பகுதி முழுவதையும் அவர் சுற்றிப் பார்த்தார். விபத்து நடந்த கடை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றும் முழுமையாக எழுந்திருந்தது அதையும் அவர் பார்வையிட்டார்.

பின்னர் அங்கு விபத்து நடைபெற்றதற்கான காரணங்கள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டு அறிந்தார். இந்த ஆய்வின் போது வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் பாண்டியன், இன்ஸ்பெக்டர் நாகராஜன் மற்றும் தாசில்தார் குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்

திருப்பத்தூர் மாவட்டத்தில் உரிமம் பெற்ற பட்டாசு கடைகள் குறைந்த அளவிலேயே உள்ளன. ஆனால் உரிமம் பெறாமல் பல இடங்களில் கிளை கடைகள் அமைக்கப்பட்டு பட்டாசுகள் விற்பனை செய்யப்படுகிறது. பெரும்பாலும் அனைத்து கடைகளிலும் போதிய பாதுகாப்பு வசதி, தீ தடுப்பு கருவிகள் இல்லாததால் இது போன்ற விபத்துக்கள் நடைபெறுகிறது.

மேலும் தற்போது பட்டாசு கடைகளில் அதிக அளவில் தடை செய்யப்பட்ட சீன பட்டாசுகள் விற்பனைக்கு உள்ளது. எனவே மாவட்டத்தில் உள்ள அனைத்து பட்டாசு கடைகளிலும் முறையாக ஆய்வு செய்து உரிமம் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story