மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம் மீண்டும் செயல்பட வேண்டும்; முன்னாள் மாணவர்கள் கோரிக்கை


மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம் மீண்டும் செயல்பட வேண்டும்; முன்னாள் மாணவர்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 3 Jan 2023 6:45 PM GMT (Updated: 3 Jan 2023 6:46 PM GMT)

வானரமுட்டியில் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம் மீண்டும் செயல்பட வேண்டும் என முன்னாள் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தூத்துக்குடி

நாலாட்டின்புத்தூர்:

வானரமுட்டியில் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம் மீண்டும் செயல்பட வேண்டும் என முன்னாள் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆசிரியர் பயிற்சி நிறுவனம்

தூத்துக்குடி மாவட்டம் வானரமுட்டி - கோவில்பட்டி சாலையில் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் செயல்பட்டு வந்தது.

இதில் தூத்துக்குடி மாவட்டம் தவிர நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மாணவ- மாணவிகளும் பயின்று வந்தனர். குறிப்பாக மாணவ- மாணவிகளுக்கு தனித்தனியாக தங்கும் விடுதிகள் அமைக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வந்தது.

இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கிராமப்புற மாணவர்கள் அதிகளவில் பயனடைந்து வந்தனர். 1993-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த பயிற்சி நிறுவனம் கடந்த 2019-ம் ஆண்டு கொரோனா காலத்தில் மூடப்பட்டது. பின்னர் மாணவ- மாணவிகள் பற்றாக்குறை மற்றும் ஆசிரியர்கள் பற்றாக்குறை என பல்வேறு காரணங்களை காட்டி இன்று வரை திறக்கப்படவில்லை. இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கிராமப்புற மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

தற்போது அந்த ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் படித்த முன்னாள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இந்த மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

முன்னாள் மாணவரும், ஆசிரியருமான சுடலைமுத்து தலைமையில் ஏராளமான முன்னாள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆசிரியர் பயிற்று நிறுவனத்தை மீண்டும் திறக்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

மீண்டும் செயல்பட வேண்டும்

இதுகுறித்து வானரமுட்டி பகுதியை சேர்ந்த ஆசிரியர் சுடலைமுத்து கூறுகையில், "வானரமுட்டி கிராமத்தில் சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வந்த இந்த மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம் மீண்டும் செயல்பட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது கட்டிடம் நல்லமுறையில் உள்ளது. குடிநீர் வசதி, மின்சார வசதி மற்றும் கழிப்பிட வசதிகள் என அனைத்து வசதிகளும் உள்ளது. ஆசிரியர் பயிற்சி நிறுவனம் மீண்டும் செயல்பட்டால் ஏழை- எளிய மாணவ- மாணவிகள் பெரிதும் பயனடைவர். இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர் மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் ஆகியோரிடம் கோரிக்கை மனு கொடுக்க உள்ளோம்" என்றார்.

இதில் ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் கோல்டாகிரேனா ராஜாத்தி, முன்னாள் மாணவர்களும், ஆசிரியர்களுமான வீரபாண்டியன், கணேசன், ரோஸ்லின் தங்கத்தாய், தமிழ்செல்வி, பூல்பாண்டியன், மகேஸ்வரி மற்றும் ஏராளமான முன்னாள்- மாணவர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story