வீட்டின் கதவை உடைத்து 12 பவுன் நகை- ரூ.1¾ லட்சம் திருட்டு


வீட்டின் கதவை உடைத்து 12 பவுன் நகை- ரூ.1¾ லட்சம் திருட்டு
x

கந்தர்வகோட்டை அருகே வீட்டின் கதவை உடைத்து 12 பவுன் நகை, ரூ.1¾ லட்சத்தை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

புதுக்கோட்டை

செவிலியர்

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகே தச்சங்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்து மகன் சின்னராசு (வயது 49). இவரது மனைவி நளினி. இவர், பட்டுக்கோட்டை அருகில் உள்ள வனசவயல் கிராமத்தில் கிராம செவிலியராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், கடந்த 23-ந் தேதி சின்னராசு வீட்டை பூட்டிவிட்டு தனது மனைவி நளினியை பார்ப்பதற்காக பட்டுக்கோட்டைக்கு சென்றுள்ளார். பின்னர் அவர் அங்கேயே தங்கி விட்டார்.

12 பவுன் நகை, ரூ.1¾ லட்சம் திருட்டு

இந்த நிலையில் சின்னராசுவின் வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதைப்பார்த்த அக்கம் பக்கத்தில் வீட்டில் இருந்தவர்கள் சின்னராசுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்கிருந்து உடனடியாக அவர் தச்சங்குறிச்சிக்கு வந்தார். பின்னர் அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தார்.

அப்போது வீட்டின் உள்ளே இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 12 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சத்து 72 ஆயிரத்து 500 ஆகியவற்றை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

மர்மநபர்களுக்கு வலைவீச்சு

இதுகுறித்து சின்னராசு கந்தர்வகோட்டை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகைகள் பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து வீட்டின் கதவை உடைத்து நகை-பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். கந்தர்வகோட்டை அருகே வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருட்டு போன சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story