நஞ்சை புகழூரில் ஆமை வேகத்தில் நடைபெறும் கதவணை பணிகள்


நஞ்சை புகழூரில் ஆமை வேகத்தில் நடைபெறும் கதவணை பணிகள்
x

நஞ்சை புகழூரில் ரூ.406½ கோடியில் தொடங்கப்பட்ட கதவணை பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. எனவே பணிகளை விரைந்து முடிக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கரூர்

கதவணை அமைக்கும் பணி

கரூர் மாவட்டம் நஞ்ைச புகழூர் கிராமத்தில் உள்ள காவிரி ஆற்றின் குறுக்கே ரூ.406 கோடியே 50 லட்சம் செலவில் கதவணை அமைக்கும் பணியை கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் 21-ந்தேதி மத்திய அமைச்சர் அமித்ஷா சென்னையில் இருந்து காணொலிக்காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இந்நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கதவணை கட்டும் பணி ஒப்பந்ததாரர்கள் மூலம் தொடங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பணிகள் கடந்த சுமார் 2 ஆண்டுகளாக ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. நஞ்ைச புகழூர் காவிரி ஆற்றில் புதிய கதவணை கட்டுவதால் வலது கரை நஞ்ைச புகழூர் கிராமத்திலும், இடது கரை நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே அனிச்சம்பாளையத்திற்கும் இடையே காவிரி ஆற்றின் குறுக்கே வாங்கல் வாய்க்காலில் தலைப்பின் கீழ் அமைக்கப்பட்டு வரும் புதிய கதவணை 1056 மீட்டர் நீளம் கொண்டதாகவும், 73 ஷட்டர்கள் அணையின் குறுக்கே வைக்கப்பட உள்ளன. இக்கதவணை அமைப்பதன் மூலம் 0.8 டி.எம்.சி. தண்ணீர் சேமிக்க முடியும். அதேபோல் 4.4 மீட்டர் உயரம் தண்ணீர் தேக்க முடியும்.புதிய கதவணை பணிகள் முடியும்போது வாங்கல் வாய்க்காலின் மூலம் 1458 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும்.அதேபோல் நாமக்கல் மாவட்டம் மோகனூர் வாய்க்கால் மூலம் 2583 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும்.

நீர்மட்டம் அதிகரிக்க வாய்ப்பு

புதிய கதவணையின் மூலம் கரூர் மற்றும் நாமக்கல் மாவட்ட பகுதிகளில் குடிநீர் ஆதாரம் மேம்படுவதோடு நிலத்தடி நீர்மட்டமும் உயரும்.அதேபோல் புகழூர் காகித ஆலைக்கு தங்கு தடை இன்றி தண்ணீர் செல்லும் வாய்ப்பு உருவாகும்.விவசாயம் சார்ந்த தொழில்கள் மேம்படும். கதவணையை சுற்றியுள்ள பகுதி பொதுமக்களுக்கு சுற்றுலாத்தலமாக அமைய வாய்ப்புகள் இருப்பதால் அதனைச் சார்ந்த பொதுமக்களின் பொருளாதாரம் மேம்படும். நாமக்கல் மாவட்டத்தில் காவிரி கரையோரம் உள்ள குட்டை, கிணறுகள் அதேபோல் கரூர் மாவட்டம் நஞ்சை புகழூர் சுற்றுவட்டாரத்தில் உள்ள குட்டை, கிணறுகள் கதவணை கட்டி முடிக்கும் போது அதில் உள்ள நீர்மட்டம் மிகவும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இப்பணிகள் 3 ஆண்டுகளில் முடிவு பெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கதவணை கட்டும் பணி கடந்த 2021 பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது.

விரைந்து முடிக்க கோரிக்கை

இந்நிலையில் சுமார் ஓராண்டு 8 மாதம் ஆகியும் காவிரி ஆற்றின் குறுக்கே நஞ்சை புகழூர் முதல் அனிச்சம் பாளையம் வரை நெடுகிலும் கம்பிகள் வைத்து கான்கிரீட் மட்டுமே தரைமட்டத்தில் போடப்பட்டுள்ளது. வேறு எந்த பணிகளும் நடைபெறவில்லை. அனைத்து பணிகளும் ஆமை வேகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதனால் 3 ஆண்டுகளில் முடிக்க வேண்டிய பணி மேலும் சில ஆண்டுகள் ஆகும் என தெரிகிறது.இந்நிலையில் காவிரி ஆற்றில் தொடர்ந்து 5 முறை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதன் காரணமாக கதவணை கட்டும் பணியில் தடங்கல் ஏற்பட்டுள்ளதாக கதவணை கட்டும் ஒப்பந்ததாரர்கள் தெரிவித்தனர். மேலும் கதவணை கட்டும் பணி முடிவு பெற இன்னும் சில ஆண்டுகள் அதிகமாகும் என்றும் தெரிவித்தனர். எனவே ஆமைவேகத்தில் நஞ்ைச புகழூர் காவிரி ஆற்றின் குறுக்கே நடைபெறும்கதவணை கட்டும் பணியை துரிதப்படுத்தி விரைந்து பணியை முடிக்க பொதுப்பணித்துறை உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story