திராவிட மாடல் ஆட்சி, பெண்களின் ஆட்சியாக நடைபெறுகிறது-அமைச்சர் எ.வ.வேலு பேச்சு


திராவிட மாடல் ஆட்சி, பெண்களின் ஆட்சியாக நடைபெறுகிறது-அமைச்சர் எ.வ.வேலு பேச்சு
x

தாயுள்ளம் கொண்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சி, பெண்களுக்கான ஆட்சியாக நடைபெற்று வருகிறது என்று கலைஞர் உரிமைத்தொகை வழங்கும் தொடக்க விழாவில் அமைச்சர் எ.வ.வேலு பேசினார்.

திருவண்ணாமலை

தாயுள்ளம் கொண்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சி, பெண்களுக்கான ஆட்சியாக நடைபெற்று வருகிறது என்று கலைஞர் உரிமைத்தொகை வழங்கும் தொடக்க விழாவில் அமைச்சர் எ.வ.வேலு பேசினார்.

மகளிர் உரிமைத் தொகை திட்டம்

தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி தகுதி வாய்ந்த குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை அண்ணா பிறந்த நாளில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காஞ்சீபுரத்தில் தொடங்கி வைத்தார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று இத்திட்டத்தின் தொடக்க விழா திருவண்ணாமலை ஒன்றியம் தச்சம்பட்டு ஊராட்சியில் நடைபெற்றது. விழாவிற்கு கலெக்டர் பா.முருகேஷ் தலைமை தாங்கினார். துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி முன்னிலை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் மு.பிரியதர்ஷினி வரவேற்று பேசினார்.

நல திட்டங்கள்

சிறப்பு அழைப்பாளராக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு 4,500 குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 பெறும் ஆணையை வழங்கினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

தி.மு.க. ஆட்சிக்கு வரும்போதெல்லாம் பெண்களுக்கான நல திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.

தந்தை பெரியார் செங்கல்பட்டில் பகுத்தறிவு மாநாடு நடத்திய போது ஆசைக்கு பெண் ஆணுக்கு ஆஸ்தி என்ற நிலையை மாற்றி பெண்களும் சமம் என்று தீர்மானத்தை கொண்டு வந்தார்.

அதன் வழியில் தலைவர் கலைஞர் பெண்களுக்கு சொத்தில் சம உரிமை என்ற சட்டத்தை கொண்டு வந்தார்.

கணவனை இழந்த விதவை பெண்களுக்கு தையல் எந்திரங்கள் வழங்கி அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திய கலைஞர் 1973-ம் ஆண்டு பெண்களும் காவல்துறையில் பணியாற்றலாம் என்று சட்டத்தை கொண்டு வந்து பெண்களை காவல்துறையில் பணி அமர்த்தினார்.

தாயுள்ளம் கொண்ட முதல்வர்

பெண்கள் குடும்பத்திற்காக உழைக்கிறார்கள். தங்கள் பிள்ளைகள் படிக்க வேண்டும் என்பதற்காக சென்னை போன்ற நகரங்களில் பல வீடுகளில் வீட்டு வேலை செய்து குழந்தைகளை படிக்க வைக்க கஷ்டப்படுகிறார்கள்.

இப்படிப்பட்டவர்களின் வாழ்க்கைத் தரம் உயர வேண்டும் என்பதற்காக தாய் உள்ளத்தோடு குடும்ப பெண்களுக்கு உடன் பிறவா சகோதரனாய், தாயாய், தகப்பனாய் இருந்து மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகையை வீடு வீடாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடுத்துள்ளார்.

பெண்களின் ஆட்சி

இந்த ஆட்சியை பொருத்தவரை இது பெண்களின் ஆட்சியாக தான் அமைந்திருக்கிறது. திராவிட மாடல் ஆட்சியில் உண்மையாகவே பெண்களை மதிக்கிற காரணத்தினால் இன்றைக்கு இல்லம் தேடி ஆயிரம் ரூபாய் வந்திருக்கிறது. இதற்கு இந்த மாவட்டத்தில் உள்ள பெண்கள் அனைவரும் முதல்-அமைச்சருக்கு நன்றி கடன் பட்டிருக்கிறோம்.

இந்தத் திட்டத்தில் ஆயிரம் ரூபாய் இன்னும் வராதவர்கள் கவலைப்பட தேவையில்லை. தகுதி உடைய அனைவருக்கும் கட்டாயம் உரிமைத் தொகை கிடைக்கும் என்பதை மீண்டும் மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேற்கண்டவாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் சி.என்.அண்ணாதுரை எம்.பி. மற்றும் எம். எல்.ஏ.க்கள் மு.பெ.கிரி.பெ.சு.தி.சரவணன். எஸ்.அம்பேத்குமார், ஒ.ஜோதி, மாவட்ட ஊராட்சி தலைவர் பார்வதி சீனிவாசன், திருவண்ணாமலை ஒன்றிய குழு தலைவர் கலைவாணி துணைத் தலைவர் ரமணன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.




Next Story