'திராவிட மாடல்' காலாவதியான கொள்கை; தமிழக அரசு குறித்து கவர்னர் பரபரப்பு பேட்டி


திராவிட மாடல் காலாவதியான கொள்கை; தமிழக அரசு குறித்து கவர்னர் பரபரப்பு பேட்டி
x

தமிழக அரசு குறித்து கவர்னர் ஆர்.என்.ரவி கடுமையாக விமர்சித்து இருக்கிறார். எந்த மசோதாவும் தன்னிடம் நிலுவையில் இல்லை என்று கூறிய அவர், ‘திராவிட மாடல்’ என்பது காலாவதியான கொள்கை என்று பேட்டி அளித்து இருக்கிறார்.

சென்னை,

தமிழ்நாட்டில் தி.மு.க. அரசுக்கும் கவர்னருக்கும் இடையே இலைமறை காயாக இருந்துவந்த கருத்து மோதல்கள் தற்போது வெளிப்படையாக தலைகாட்டத் தொடங்கிவிட்டன.

திராவிடம் பற்றி விமர்சனம்

'தமிழகத்தில் நாங்கள் நடத்தி வருவது திராவிட மாடல் அரசு' என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒருபுறம் பெருமைபட பேசிக்கொண்டு வருகிறார். இன்னொரு புறம் கவர்னர், 'திராவிடம்' என்ற சொல்லை வெளிப்படையாக விமர்சனம் செய்துக்கொண்டு இருக்கிறார்.

இதுதொடர்பாக ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு கவர்னர் பரபரப்பாக பேட்டி அளித்து இருக்கிறார். அவரிடம் கேட்ட கேள்விகளும் அதற்கு கவர்னர் ஆர்.என்.ரவி அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- இந்த ஆண்டு சட்டசபையில் தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது நீங்கள் வெளியேறியதும், உங்கள் உரையில் முக்கிய தலைவர்களின் பெயரை நீங்கள் நீக்கியதும் சரிதானா? இதில் நீங்கள் சரியாக செயல்பட்டீர்களா?

பதில்:- 2022-ம் ஆண்டில் முதல்முறையாக சட்டசபையில் நான் உரையாற்றுவதற்கு முன்பு, சட்டசபையில் தேசிய கீதத்தை இசைக்க மாட்டோம் என்று என்னிடம் தெரிவித்தனர். ஆனால் தேசிய கீதம் கண்டிப்பாக பாடப்பட வேண்டும் என்று நான் வலியுறுத்தினேன். சட்டசபைக்கு கவர்னர் வரும்போதும், வெளியே செல்லும்போதும் தேசிய கீதம் மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் இசைக்கப்பட வேண்டும். எனது வலியுறுத்தலை ஏற்காமல், ஆரம்பத்தில் தேசிய கீதத்தை இசைக்காமல் தவிர்த்தனர். ஆனால் கவர்னர் வெளியே செல்லும்போது அந்தப் பாடல் இசைக்கப்பட்டது.

இந்த முறை, சட்டசபையில் உரையாற்றுவதற்காக எனக்கு சபாநாயகர் வந்து அழைப்பு விடுத்தபோது, இதுதொடர்பாக நான் மீண்டும் வேண்டுகோள் விடுத்தேன். நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் தேசிய கீதத்திற்கு மரியாதை அளிக்கப்படுகிறது. வாய்மொழியாக இந்த வேண்டுகோளை நான் விடுத்தாலும், இதுதொடர்பாக கடிதம் எழுதுவேன் என்றும் சபாநாயகரிடம் கூறினேன். சபாநாயகருக்கும், முதல்-அமைச்சருக்கும்கூட கடிதம் எழுதினேன். அவர்கள் தேசிய கீதத்தை இசைக்கவில்லை.

கொள்கை இல்லாத உரை

கவர்னர் பேசும் உரையை மாநில அரசு தயாரிக்கும்போது, அது பொதுவாக அரசின் கொள்கைகள் மற்றும் திட்டங்களை கொண்டதாக இருக்கும். அது அப்படித்தான் இருக்க வேண்டும். அதைத்தான் கவர்னர் வாசிக்க வேண்டும். ஆனால் என்னிடம் தரப்பட்ட உரையில் திட்டங்கள் பற்றியோ கொள்கைகள் பற்றியோ எதுவும் இல்லை. ஆனால் அரசைப் பற்றிய புகழ்ச்சிதான் இடம் பெற்றிருந்தது.

துல்லியமாக கூறாமல், பொய்களையும் சொல்லி இருந்தனர். சட்டம் ஒழுங்கை பொறுத்தவரை தமிழகம் அமைதியின் சொர்க்கமாக திகழ்கிறது என்று கூறியிருந்தனர். ஆனால் நான் சில சம்பவங்களை அவர்களிடம் குறிப்பிட்டு கூறினேன். பயங்கரவாத இயக்கமான 'பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா' (பி.எப்.ஐ.) இயக்கத்தை தடை செய்த மறுநாளில் இருந்து 5 நாட்களுக்கு தமிழகத்தில் பயங்கரவாத தாக்குதல் தொடர்ந்தது. வீடுகள், வாகனங்களில் 50 வெடிகுண்டுகள் வீசப்பட்டன. ஆனால் அதில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

அடுத்ததாக, கோவையில் கோவில் ஒன்றில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. துரதிருஷ்டவசமாக கள்ளக்குறிச்சியில் மாணவி தற்கொலையை தொடர்ந்து அங்குள்ள பள்ளி தாக்கப்பட்ட சம்பவம் பற்றி கூறினேன். 5 நாட்களுக்கு பிறகு மக்கள் 5 ஆயிரம் பேர் தூரமான இடங்களில் இருந்து திரண்டு வந்து பள்ளியில் சான்றிதழ்கள், நூலகம் ஆகியவற்றை எரித்தனர். பசுக்களின் மடுவை அறுத்தனர். அதற்கான வீடியோக்கள் உள்ளன. இவையெல்லாம் போலீசார் தொடர்ந்து பார்த்துக்கொண்டிருந்தபோதே நடந்தன.

கோவில் நிலம் மீட்பு

சட்டசபை கூடுவதற்கு சில வாரங்களுக்கு முன்பு, ஒரு பொதுக்கூட்டத்தில் தி.மு.க. பிரமுகர் ஒருவரால் பெண் போலீஸ் மானபங்கப்படுத்தப்பட்டார். அதுதொடர்பான வழக்கை திரும்பப் பெறுவதற்கு அவர் வற்புறுத்தப்பட்டார். அதுமட்டுமல்லாமல், ஒவ்வொரு நாளும் மாபியாக்கள் பற்றி கேள்விப்படுகிறோம். சமீபத்தில் கிராம நிர்வாக அலுவலர் ஒருவர் அலுவலகத்திலேயே மணல் மாபியாக்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

மேலும், தமிழக அரசுக்கு இந்திய முகமைகள் கொடுத்துள்ள தகவலில், சர்வதேச அளவில் போதைப் பொருள் கடத்தலுக்கும், தமிழகம் மற்றும் பாகிஸ்தானில் ஆயுதங்களை கடத்துவதற்கான ஆட்கள் உள்ளதாக கூறப்பட்டு உள்ளது. இப்படி நடந்துகொண்டிருக்கும்போது, இதை அமைதியின் சொர்க்கம் என்று நான் சொல்வதற்கு என்னை நீங்கள் கேட்டுக்கொள்வீர்களா? பதவிப் பிரமாணம் எடுத்துள்ளபடி, மக்களிடம் உண்மையை மட்டுமே சொல்வதற்கு கட்டுப்பட்டவன் நான்.

மேலும், ஆக்கிரமிப்புக்கு உள்ளான 3 ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட கோவில் நிலங்களை மீட்டுள்ளதால் கோவில்கள் தொடர்பான நிர்வாகம் சிறப்பாக நடப்பதாக கூறி அதற்காக நான் பாராட்டு தெரிவிக்கும்படி தமிழக அரசு விரும்பியது. அது நல்லதுதான். ஆனால் 50 ஆயிரம் ஏக்கருக்கு மேலான கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியுள்ள நிலையில் அவற்றை மீட்டு இருப்பது மிகச்சிறிய அளவுதான்.

காலாவதியான கோட்பாடு

இந்த பின்னணிகளை வைத்துக்கொண்டு அரசை நான் புகழ வேண்டும் என்று நீங்கள் விரும்புவீர்களா?.

ஆனால் நான் புகழ வேண்டும் என்றும், திராவிட மாடல் அரசை அங்கீகரிக்க வேண்டும் என்றும் விரும்பினார்கள். முதலில், அப்படியொரு நிர்வாகமே கிடையாது. திராவிட மாடல் என்பது வெறும் அரசியல் கோஷம்தான். 'ஒரே பாரதம், ஒரே இந்தியா' என்ற சித்தாந்தத்தை ஏற்காத மற்றும் காலாவதியான கோட்பாட்டை தூக்கிப்பிடிக்கும் வெற்று முயற்சி அதுவாகும்.

சமீபத்தில் வாசிக்கப்பட்ட பட்ஜெட் உரையில், கலைஞர் நூலகத்தை அமைக்க இருப்பதாகவும் அதில் 3.25 லட்சம் தமிழ் மற்றும் ஆங்கில புத்தகங்களை மட்டும் வைக்க இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. வேறு மொழி புத்தகங்கள் அதில் இடம்பெறாது. பிரிவினைவாத உணர்வுகளை ஏற்படுத்தியுள்ள சித்தாந்தம் அது.

நான் உரையாற்றிய பிறகு அதன் தமிழாக்கத்தை சபாநாயகர் வாசித்தார். அப்போது நான் காத்திருந்தேன். ஆனால் நெறிமுறைகளுக்கும், விதிமுறைகளுக்கும் மாறாக முதல்-அமைச்சர் எழுந்து நின்று, சபாநாயகரின் மறைமுக ஆதரவுடன் செயல்பட்டு, கவர்னரை சங்கடப்படுத்தும் வகையில் அவருக்கு எதிராக ஒரு தீர்மானத்தை கொண்டு வந்தார். அப்படிச் செய்ய நான் அனுமதிக்கவில்லை. ஒரு கவர்னரை அவர் இருக்கும்போதே எப்படி சங்கடப்படுத்த முடியும்? எனவேதான் வெளிநடப்பு செய்தேன்.

முதல்-அமைச்சர் நல்ல மனிதர்

கேள்வி:- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடனான உங்களின் தனிப்பட்ட பழக்கம் எப்படிப்பட்டது?

பதில்:- அது நல்லவிதமாக உள்ளது. உண்மையில், அவர் மீது எனக்கு தனிப்பட்ட முறையில் அதிக அன்பு உண்டு. ஒரு நல்ல மனிதர் அவர். அவர் மீது நான் மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். அதுபோல அவரும் என் மீது மிகுந்த மரியாதை கொண்டிருக்கிறார். தனிப்பட்ட முறையில் எங்களுக்குள் நல்ல உறவு உள்ளது.

மசோதாக்கள் நிலுவையில் இல்லை

கேள்வி:- தமிழக அரசால் எத்தனை மசோதாக்கள் அனுப்பி வைக்கப்பட்டன? அதில் எத்தனை உங்களிடம் நிலுவையில் உள்ளன?

பதில்:- கவர்னர் மாளிகையில் எந்தவொரு மசோதாவும் நிலுவையில் இல்லை. 2021-ம் ஆண்டு செப்டம்பரில் நான் கவர்னராக இங்கு வந்தபோது 19 மசோதாக்கள் வந்தன. அதில் 18 மசோதாக்களை அனுப்பினேன். பொதுப்பட்டியலில் இருப்பதால் நீட் தேர்வு குறித்த மசோதாவை மட்டும் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்காக நான் 'ரிசர்வ்'வில் வைத்தேன். 2022-ம் ஆண்டில் 59 மசோதாக்கள் வந்தன. அவற்றில் 48-ஐ அனுப்பினேன். ஜனாதிபதிக்கான 3 மசோதாக்களை 'ரிசர்வ்'வில் வைத்தேன். ஒன்றை அரசே திரும்பப் பெற்றுக்கொண்டது. 8 மசோதாக்களுக்கான அனுமதி நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. அதன்படி 2022-ம் ஆண்டுக்கான மசோதா எதுவும் நிலுவையில் இல்லை.

2023-ம் ஆண்டில் 7 மசோதாக்கள் வந்தன. அவை அனைத்திற்கும் அனுமதி அளிக்கப்பட்டு விட்டது. ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான மசோதா நிறுத்தி வைக்கப்பட்டால் அதற்கு ஒப்புதல் கொடுக்கவில்லை என்றுதான் அர்த்தம் என்று நான் கூறியதாகச் சொல்லி பல்வேறு நாடகங்கள் அரங்கேற்றப்பட்டன. மேலும், சட்டசபையில் ஒரு மசோதா நிறைவேற்றி அனுப்பப்பட்டால் அதற்கு கவர்னர் ஒப்புதல் கொடுத்துத்தான் ஆக வேண்டும் என்ற ஒரு கருத்துப்பதிவும் உருவாக்கப்பட்டது.

ஆனால் அரசியல் சாசனத்தின் 200-ம் பிரிவின்படி, கவர்னர் அந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிப்பதாகவோ அல்லது ஒப்புதலை நிறுத்தி வைப்பதாகவோ அல்லது ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக வைத்திருப்பதாக அறிவிக்கலாம் என்று கூறப்பட்டு உள்ளது. எனவே பண மசோதா தவிர மற்ற மசோதாக்களில் கவர்னருக்கு முடிவெடுக்க இந்த 3 வாய்ப்புகள் உள்ளன.

மசோதாவுக்கான அனுமதி நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது என்பதால் மசோதா வீழ்ந்துவிட்டது என்றுதான் நான் பேசினேன். இதில் எந்த குழப்பமும் இல்லை. கவர்னருக்கு மற்றொரு வாய்ப்பும் உள்ளது. மறுபரிசீலனைக்காக அந்த மசோதாவை சட்டசபைக்கு கவர்னர் அனுப்பி வைக்கலாம். அதை மறுபரிசீலனை செய்து அரசு திருப்பி அனுப்பினால், அதற்கு கவர்னர் ஒப்புதலை வழங்கியாக வேண்டும். அப்படி ஆன்லைன் சூதாட்ட மசோதா உள்பட 2 மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளேன்.

பல்கலைக்கழகத்தில் அரசியல்

கேள்வி:- நீங்கள் நிறுத்தி வைத்த 8 மசோதாக்களும் பல்கலைக்கழகம் சம்பந்தப்பட்டவையா?

பதில்:- ஆமாம். ஏன் அவற்றை நிறுத்தி வைத்தேன் என்றால் கல்வி என்பது பொதுப்பட்டியலில் வரும் அம்சம். பல்கலைக்கழக மானியக் குழுவின் சட்டங்களுக்குள்தான் மாநில சட்டங்கள் நிலைபெற்றிருக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு மீண்டும் மீண்டும் கூறியுள்ளது. அதில் அரசியல் தலையீடுகள் இருக்கக் கூடாது. ஆனால் தமிழகத்தில் நமது மாநில பல்கலைக்கழகங்கள் அனைத்தும் துரதிருஷ்டவசமாக மாநில அரசுத் துறைகள் போல் இயக்கப்படுகின்றன.

காப்பாற்றப்பட்டுள்ள ஒரே உரிமை, துணை வேந்தர் நியமனம் மட்டும்தான். துணை வேந்தர் ஒருவராவது சரியானவராக இருக்க வேண்டும். அவரை வேந்தர் (கவர்னர்) நியமிக்கிறார். அந்த அதிகாரமும் முதல்-அமைச்சரிடம் போய்விட்டால் அது முழுக்க முழுக்க அரசியல் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிடும்.

காவல்துறையில் அரசியல்

கேள்வி:- முன்னாள் போலீஸ் அதிகாரி என்ற முறையில், தமிழக காவல்துறை சுதந்திரமாக செயல்படுவதற்கான உங்கள் கருத்து என்ன?

பதில்:- காவல்துறை அரசியலாக்கப்பட்டு இருக்கிறது. அதற்கு நான் உதாரணம் சொல்கிறேன். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தருமபுரம் ஆதீனத்துக்கு செல்லும்போது என்னுடைய பாதுகாப்பு வாகனம் கம்பு மற்றும் கற்களால் தாக்குதலுக்கு ஆளானது.

இதையடுத்து சில அச்சுறுத்தல்கள் மற்றும் துஷ்பிரயோகங்கள். இந்த விவகாரங்களில் கவர்னர் புகார் கொடுத்தும், குற்றவாளிகள் ஆளும்கட்சியினர் என்பதால் போலீஸ் வழக்குப்பதிவு செய்யவில்லை. கவர்னர் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை பெற முடியாவிட்டால், அது காவல் துறையை பற்றி நல்ல முறையில் பேசாது.

தரமான கல்வியில் முதலீடு

கேள்வி:- தி.மு.க. அரசின் ஆட்சி குறித்து உங்களுடைய ஒட்டுமொத்த கருத்து என்ன?

பதில்:- அரசின் செயல்பாடு குறித்து நான் கருத்து சொல்வது பொருத்தமாக இருக்காது. மக்கள்தான் அதனை தீர்மானிக்க வேண்டும். மனித வளத்தின் தரத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான சரிவுதான் எனக்கு இப்போது இருக்கும் முக்கியமான கவலையாக இருக்கிறது. இந்த வருடம் 90 சதவீத நமது என்ஜினீயர்கள் வேலை இல்லாமல் இருப்பதாக கூறுகிறார்கள். தரம் என்று வரும்போது, பல்கலைக்கழகங்களில் இந்த சரிவு ஏற்படுகிறது.

ஒரு காலக்கட்டத்தில் தமிழகம் சிறப்பானதாக இருந்தது. இப்போது நாம் கீழ் நோக்கி சறுக்கிக்கொண்டே செல்கிறோம்.

இவ்வாறு கவர்னர் ஆர்.என்.ரவி பதில் அளித்து இருக்கிறார்.


Next Story