திராவிட மாடல் அரசு மத்திய அரசுக்கு சிம்ம சொப்பனமாக உள்ளது
திராவிட மாடல் அரசு மத்திய அரசுக்கு சிம்ம சொப்பனமாக உள்ளது. இதனால் ஏதாவது செய்ய முடியுமா? என்று மத்திய துறைகளை ஏவி விடுவதாக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கூறினார்
கோவை
திராவிட மாடல் அரசு மத்திய அரசுக்கு சிம்ம சொப்பனமாக உள்ளது. இதனால் ஏதாவது செய்ய முடியுமா? என்று மத்திய துறைகளை ஏவி விடுவதாக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கூறினார்.
டைடல் பூங்கா ஆய்வு
கோவை பீளமேட்டில் உள்ள தகவல் தொழில் நுட்ப பூங்கா (டைடல் பார்க்) மற்றும் எல்காட் அலுவலகத்தை தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா நேற்று நேரில் ஆய்வு செய்தார். பின்னர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
டைடல் பார்க் மற்றும் எல்காட் ஆகிய இடங்களில் நடக்கும் வளர்ச்சி பணிகளை நேரில் ஆய்வு செய்துள்ளோம். கோவையின் வளர்ச்சிக்காக, புதிய திட்டங்கள் கொண்டு வருவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழகத்தின் வளர்ச்சிக்காக பா.ஜனதாவும், மத்திய அரசும் எதுவும் செய்யாமல், சிறுபிள்ளைத்தனமான வேலைகளில் ஈடுபட்டு கொண்டிருக்கின்றனர். இவற்றை விட்டு ஆக்கப்பூர்வமான வேலைகளை அவர்கள் தமிழகத்திற்கு செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அடக்குமுறை
இதைத் தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது குறித்த கேள்விக்கு அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பதில் அளித்து கூறியதாவது:-
தி.மு.க. இதை விட பெரிய முதலைகளை எல்லாம் சந்தித்த இயக்கம். இந்த அடக்குமுறையில் இருந்து இன்னும் வலிமையாக வெளியே வருவோம். நிச்சயமாக எந்த தவறும் இல்லை என நிரூபித்து செந்தில் பாலாஜி வழக்கில் இருந்து வெளியே வருவார். தி.மு.க.வை அடக்க வேண்டும் என்று நினைத்தால் இன்னும் வேகமாக வெளியே வரும்.
கலைஞரின் வளர்ப்பு, தளபதியின் தம்பிகள் நாங்கள், இதற்கெல்லாம் பயந்து போகும் ஆட்கள் கிடையாது. செந்தில் பாலாஜி கைதின்போது நிறைய விதிமுறைகள் மீறப்பட்டுள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜியை பொறுத்தவரை சிறப்பான பணியை செய்து கொண்டிருக்கிறார். மத்தியில் அவர்கள் பதவியில் இருப்பதால் ஆடுகிறார்கள்.
திராவிட மாடல் அரசு
தி.மு.க. மிகச் சிறப்பாக வளர்ந்து கொண்டிருக்கிறது. முதல்- அமைச்சருக்கு நற்பெயர் உருவாகி இருக்கிறது. அவர் அயராமல் உழைத்துக் கொண்டு இருக்கிறார். வெளிநாடுகளில் இருந்து பல்வேறு முதலீடுகளைக் கொண்டு வந்து சேர்க்கிறார். மத்திய அரசுக்கு திராவிட மாடல் அரசு ஒரு சிம்ம சொப்பனமாக இருக்கிறது. அதைக் கண்டு பயப்பட்டு, மத்திய அரசு அவர்களிடம் இருக்கும் மத்திய துறைகளை ஏவி விட்டு ஏதாவது செய்ய முடியுமா? என பார்க்கின்றனர். அவர்களுக்கு தி.மு.க.வை பற்றி தெரியவில்லை. நாங்கள் யார் என்பதை முதல்- அமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு கற்று கொடுப்பார்.
இவ்வாறு அவர் கூறினார்.