கடலூர் முதுநகரில்பஸ் கண்ணாடியை உடைத்து டிரைவர், கண்டக்டர் மீது சரமாரி தாக்குதல் :2 பேருக்கு வலைவீச்சு
கடலூர் முதுநகரில் அரசு பஸ் கண்ணாடியை உடைத்து டிரைவர், கண்டக்டரை சரமாரியாக தாக்கிய 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கடலூர் முதுநகர்,
புதுச்சேரியில் நேற்று முன்தினம் இரவு பயணிகளை ஏற்றிக்கொண்டு கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்துக்கு அரசு விரைவு பஸ் ஒன்று புறப்பட்டது. பஸ்சை கன்னியாகுமரி மாவட்டம் நட்டாழத்தை சேர்ந்த அகஸ்டின் போன்பியாஸ் (வயது 59) என்பவர் ஓட்டினார். கண்டக்டராக திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் தாலுகா துரை கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த ஈனமுத்து மகன் சொக்கலிங்கம் (38) என்பவர் பணியில் இருந்தார்.
கடலூர் முதுநகர் பூண்டியாங்குப்பத்தில் சாலையோரம் தேங்கி கிடந்த மழைநீரை அந்த பஸ் வாரி இறைத்தபடி சென்றது. அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் மீது, பஸ் வாரி இறைத்த தண்ணீர் பட்டது.
சரமாரி தாக்குதல்
இதனால் ஆத்திரமடைந்த 2 பேரும், மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்று பஸ்சை வழிமறித்தனர். பின்னர் அவர்கள், அரசு பஸ்சின் கதவு கண்ணாடியை அடித்து உடைத்தனர். மேலும் டிரைவர் அகஸ்டின் போன்பியாஸ், கண்டக்டர் சொக்கலிங்கம் ஆகிய 2 பேரையும் சரமாரியாக தாக்கி விட்டு, அதே மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் சென்றனர். இதில் காயமடைந்த 2 பேரும் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் கடலூர் முதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பஸ் கண்ணாடியை உடைத்து டிரைவர், கண்டக்டரை தாக்கிய 2 பேர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்கள்? என்பது குறித்து விசாரணை நடத்திவருவதோடு அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.