கிணற்றில் குதித்து டிரைவர் தற்கொலை


கிணற்றில் குதித்து டிரைவர் தற்கொலை
x
தினத்தந்தி 19 Aug 2023 12:15 AM IST (Updated: 19 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

திண்டிவனம் அருகே பறிமுதல் செய்த மினி லாரியை வங்கி அதிகாரிகள் ஏலம் விட்டதால் விரக்தி அடைந்த லாரி டிரைவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம்

திண்டிவனம்

மினி லாரி டிரைவர்

திண்டிவனத்தை அடுத்த நடுவனந்தல் அருகே உள்ள புதூர் கிராமத்தை சேர்ந்தவர் சேகர் மகன் லிங்கம் என்கிற சுரேஷ்(வயது28). இவர் தனது நிலத்தை விற்றும், தனியார் வங்கியில் கடன் வாங்கியும் மினி லாரி ஒன்றை வாங்கி ஓட்டி பிழைப்பு நடத்தி வந்தார். இந்த நிலையில் மினி லாரி திடீரென பழுதடைந்ததால் சுரேஷ் தன்னிடம் இருந்த பணத்தை வைத்து அதை சரிசெய்தார். இதனால் அவர் 2 மாதம் வங்கிக்கு தவணை தொகையை செலுத்தாததால் தனியார் வங்கி அதிகாரிகள் மினி லாரியை பறிமுதல் செய்து கொண்டு சென்றனர்.

கிணற்றில் குதித்து தற்கொலை

இதன் பின்னர் சுரேஷ் குறிப்பிட்ட தனியார் வங்கிக்கு சென்று கேட்டபோது முழு தொகையையும் செலுத்தினால்தான் மினி லாரி விடுவிக்கப்படும் என தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால் முழு தொகையையும் அவர் திருப்பி செலுத்ததால் மினி லாரியை வங்கி அதிகாரிகள் ஏலம் விட்டனர். இதனால் மனம் உடைந்து காணப்பட்ட சுரேஷ் அவரது தந்தையின் நிலத்தில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

சாவில் சந்தேகம்

ஆனால் அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக சுரேசின் தந்தை சேகர் கொடுத்த புகாரின் பேரில் வெள்ளிமேடு பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். பறிமுதல்செய்த மினி லாரியை வங்கி அதிகாரிகள் ஏலம் விட்டதால் மனமுடைந்து டிரைவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடுவனந்தல் கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படு்தியுள்ளது.


Next Story