மாணவர்கள் தரக்குறைவாக பேசியதாக டிரைவர்-கண்டக்டர்கள் போராட்டம்


மாணவர்கள் தரக்குறைவாக பேசியதாக டிரைவர்-கண்டக்டர்கள் போராட்டம்
x

மாணவர்கள் தரக்குறைவாக பேசியதாக டிரைவர்-கண்டக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி

சமயபுரம்:

படிக்கட்டுகளில் பயணம்

திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் இருந்து மண்ணச்சநல்லூர் வழியாக திருப்பைஞ்சீலி, மூவானூர், பாச்சூர், திருவெள்ளறை உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு தினமும் அரசு டவுன் பஸ்கள் சென்று வருகின்றன. மண்ணச்சநல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள், பள்ளி முடிந்தவுடன் இந்த வழித்தடங்களில் செல்லும் பஸ்களில் செல்லும்போது உள்ளே செல்லாமல் படிக்கட்டிலேயே நின்று பயணம் செய்வதாக தெரிகிறது.

அவ்வப்போது கண்டக்டர்கள் மற்றும் டிரைவர்கள் மாணவர்களை உள்ளே வருமாறு அழைத்தாலும் அவர்கள் வருவதில்லை என்று கூறப்படுகிறது.

போராட்டம்

இந்நிலையில் நேற்று மாலை மண்ணச்சநல்லூரில் பஸ்களில் ஏறிய பள்ளி மாணவர்கள் உள்ளே செல்லாமல் படிக்கட்டுகளில் தொங்கிக்கொண்டே வந்தனர். இதனால் ஆத்திரமடைந்த கண்டக்டர் மற்றும் டிரைவர்கள், மாணவர்களை உள்ளே வருமாறு அழைத்தனர். அப்போது மாணவர்களுக்கும், கண்டக்டர், டிரைவர்களுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில், அவர்களை மாணவர்கள் தரக்குறைவாக பேசியதாக தெரிகிறது. இதை கண்டித்து பஸ்களை சாலையிலேயே நிறுத்தி கண்டக்டர், டிரைவர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாக வந்த பஸ்கள் மற்றும் கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல முடியாமல் அணிவகுத்து நின்றன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அறிவுறுத்த வேண்டும்

இதுபற்றி தகவல் அறிந்த மண்ணச்சநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களை கலைந்து போக செய்தனர். இதையடுத்து டிரைவர்கள் பஸ்களை ஓட்டிச்சென்றனர். பின்னர் போக்குவரத்து சீரானது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

இது பற்றி அப்பகுதியை சேர்ந்தவர்கள் கூறுகையில், பெற்றோர்கள் தங்களது மகன்களையும், அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள், தங்களிடம் படிக்கும் மாணவர்களையும் பஸ்களில் செல்லும்போது படிக்கட்டில் தொங்காமல் உள்ளே சென்று பாதுகாப்பாக பயணம் செய்ய வேண்டும். தேவையற்ற முறையில் தகாத வார்த்தைகளில் கண்டக்டர், டிரைவர்களை பேசக்கூடாது என்று அறிவுறுத்த வேண்டும், என்று கூறினர்.


Next Story