குடிபோதையில் அரசு பஸ்சை ஓட்டிய டிரைவர்; தடுப்புச்சுவரில் மோதியதால் பயணிகள் அலறல்
தேனி அருகே குடிபோதையில் அரசு பஸ்சை டிரைவர் ஓட்டியதால் தடுப்புச்சுவரில் மோதி விபத்தில் சிக்கியது.
தேனி அருகே குடிபோதையில் அரசு பஸ்சை டிரைவர் ஓட்டியதால் தடுப்புச்சுவரில் மோதி விபத்தில் சிக்கியது.
தடுப்புச்சுவரில் மோதிய பஸ்
தேனியில் இருந்து நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் நெல்லைக்கு அரசு பஸ் ஒன்று புறப்பட்டது. இந்த பஸ்சில் 50-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். பஸ்சை தேவதானப்பட்டி அருகே உள்ள டி.வாடிப்பட்டியை சேர்ந்த ராஜா (வயது 37) என்பவர் ஓட்டினார்.
தேனி பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டதில் இருந்தே பஸ்சை டிரைவர் ராஜா அதிவேகமாக ஓட்டியதாக கூறப்படுகிறது. தேனி அருகே ஆண்டிப்பட்டி சாலையில், திருமலாபுரம் விலக்கு பகுதியில் அந்த பஸ் வந்தபோது திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் நடுவில் அமைக்கப்பட்டுள்ள தடுப்புச்சுவரில் மோதி நின்றது. அதேபோல் அங்கு அமைக்கப்பட்டிருந்த சிக்னல் கம்பி மீதும் பஸ் மோதியது.
மதுபோதையில் டிரைவர்
கண்ணிமைக்கும் நேரத்தில் இந்த சம்பவம் நடந்த நிலையில், பஸ்சில் வந்த பயணிகள் அச்சமடைந்ததுடன் அபயகுரல் எழுப்பினர். இதில், சில பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது. பஸ் தடுப்புச்சுவரில் மோதிய நேரத்தில் சாலையில் முன்பும், பின்பும் எந்த வாகனங்களும் வராததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இதற்கிடையே பஸ்சில் வந்த பயணிகள், டிரைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது தான் அவர் குடிபோதையில் இருந்தது தெரியவந்தது. இதனால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து க.விலக்கு போலீசாருக்கு பயணிகள் தகவல் தெரிவித்தனர்.
வழக்குப்பதிவு
அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்தினர். அதன்பிறகு பயணிகளை மாற்று பஸ்சில் ஏற்றி அனுப்பி வைத்தனர். மேலும் டிரைவர் ராஜாவை தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்று சோதனை செய்தனர். அதில் அவர் மதுகுடித்து இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மதுபோதையில் அரசு பஸ்சை ஓட்டிய டிரைவர் ராஜா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரசு பஸ்சை டிரைவர் மதுபோதையில் ஓட்டிச்சென்று விபத்தில் சிக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.