டிரைவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதால் சுற்றுலா பஸ் விபத்தில் சிக்கியது; 22 பேர் உயிர் தப்பினர்
குன்னூர் அருகே டிரைவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதால் சுற்றுலா பஸ் விபத்தில் சிக்கியது. இதில் அதிர்ஷ்டவசமாக 22 பேரும் உயிர் தப்பினர்.
குன்னூர்:குன்னூர் அருகே டிரைவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதால் சுற்றுலா பஸ் விபத்தில் சிக்கியது. இதில் அதிர்ஷ்டவசமாக 22 பேரும் உயிர் தப்பினர்.
தடுப்புச்சுவரில் மோதிய பஸ்
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே முத்தப்பாளையம் பகுதியில் டைல்ஸ் கம்பெனி உள்ளது. இந்த கம்பெனியில் பணியாற்றும் 2 பெண்கள் உட்பட 22 பேர், சுற்றுலா பஸ்சில் ஊட்டிக்கு சுற்றுலா வந்தனர். இந்த பஸ்சை குழந்தைசாமி என்ற டிரைவர் ஓட்டி வந்தார்.
அதன்படி ஊட்டியில் உள்ள சுற்றுலா தலங்களை பார்த்து விட்டு நேற்றுமுன்தினம் இரவு மீண்டும் ஈரோடுக்கு பஸ்சில் புறப்பட்டு சென்றனர். குன்னூர்- ேமட்டுப்பாளையம் சாலை காட்டேரி அருகே பஸ் சென்று கொண்டிருந்தபோது திடீரென்று டிரைவர் குழந்தைசாமிக்கு வலிப்பு ஏற்பட்டது. இதனால் பஸ், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடி சாலையின் ஓரத்தில் இருந்த தடுப்புச்சுவரில் மோதி நின்று விபத்துக்குள்ளானது.
உயிர் தப்பினர்
இதில் சாலையின் மறுபுறம் 200 அடி பள்ளம் இருந்தது. அதிர்ஷ்டவசமாக அந்த பள்ளத்தில் பஸ் கவிழாமல் இருந்ததால் 22 பேரும் உயிர் தப்பினர். தொடர்ந்து படுகாயமடைந்த டிரைவர் குழந்தைசாமி குன்னூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இந்த விபத்து குறித்து குன்னூர் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.