அரசு பஸ்சுக்குள் புகை பிடித்த டிரைவர்


அரசு பஸ்சுக்குள் புகை பிடித்த டிரைவர்
x

நடுவழியில் நிறுத்தி மலைக்கிராம மக்களுடன் அரசு பஸ் டிரைவர் வாக்குவாதம் செய்தார். பஸ்சுக்குள் புகைபிடித்த அந்த டிரைவரின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

திண்டுக்கல்

நடுவழியில் நிறுத்தம்

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டுவில் இருந்து ஆடலூருக்கு தினமும் மதியம் 1½ மணிக்கு அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ் ஊத்து, பண்ணைக்காடு, தாண்டிக்குடி, குப்பம்மாள்பட்டி, தடியன்குடிசை, கே.சி.பட்டி வழியாக ஆடலூருக்கு மாலை 4¾ மணிக்கு சென்றடையும்.

அதன்படி நேற்று முன்தினம் வழக்கம் போல அரசு பஸ் ஆடலூர் நோக்கி புறப்பட்டது. அந்த பஸ்சில் கே.சி.பட்டி, ஆடலூர் செல்வதற்காக தடியன்குடிசையில் பயணிகள் காத்திருந்தனர். மாலை 3¾ மணி அளவில் தடியன்குடிசைக்கு அந்த பஸ் வந்தது.

பஸ்சில் பயணிகள் ஏற முயன்றனர். ஆனால் பஸ்சில் ஏற டிரைவரும், கண்டக்டரும் அனுமதி மறுத்தனர். பின்னர் அந்த பஸ் தடியன்குடிசையிலேயே திரும்பி மீண்டும் வத்தலக்குண்டுவுக்கு புறப்பட தயாரானது. இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். பஸ் நிறுத்தத்தில் காத்திருந்த கர்ப்பிணிகள், குழந்தைகள், முதியவர்கள் பரிதவித்தனர்.

பஸ்சுக்குள் புகைபிடித்த டிரைவர்

ஆடலூருக்கு பஸ் இயக்காதது குறித்து டிரைவரிடம் பயணிகள் கேட்டனர். அதற்கு அவர் ஏற்கனவே தாமதம் ஆகி விட்டதாகவும், இதனால் ஆடலூர் செல்ல முடியாது என்றும், வேறு வாகனங்களில் செல்லுமாறு தெரிவித்தார். இதனை ஏற்றுக்கொள்ளாத பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கிடையே கைகலப்பும் ஏற்பட்டது. இதற்கிடையே பயணிகளுக்கு சரிவர பதில் அளிக்காத டிரைவர், பஸ்சின் இருக்கையில் அமர்ந்தபடி புகைபிடித்து கொண்டிருந்தார். இதனை அங்கிருந்தவர்கள் தங்களது செல்போனில் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்தனர். தற்போது அந்த வீடியோ, புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதற்கிடையே பயணிகளிடம் வாக்குவாதம் செய்தது குறித்தும், பஸ்சுக்குள் புகைபிடித்தது குறித்தும் டிரைவரிடம் விளக்கம் கேட்க வத்தலக்குண்டு அரசு போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மலைக்கிராம மக்கள் அவதி

மலைக்கிராம மக்கள் எவ்வளவு சொல்லியும் கேட்காத டிரைவர், ஆடலூருக்கு செல்லாமல் மீண்டும் பஸ்சை வத்தலக்குண்டு நோக்கி கொண்டு சென்று விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து பயணிகள் கூறுகையில், மலைக்கிராமங்களுக்கு சரிவர பஸ்கள் இயக்கப்படுவதில்லை. இதனால் பல கிலோமீட்டர் தூரம் நாங்கள் நடந்தே செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வனவிலங்குகளால் எங்களுக்கு பாதிப்பு ஏற்படும் சூழல் உள்ளது. தடியன்குடிசையில் இருந்து ஆடலூர் 16 கிலோமீட்டர் தூரம் ஆகும். இதுபோன்று நடுவழியில் பலமுறை டிரைவர், கண்டக்டர்கள் இறக்கி விட்டுள்ளனர்.

மேலும் டிரைவர், கண்டக்டர்கள் குடிபோதையில் வருகின்றனர். அவர்கள், பயணிகளிடம் தரக்குறைவாக பேசுகின்றனர். இதற்கு அரசு போக்குவரத்து கழகம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். மலைக்கிராம மக்களின் நலன் கருதி கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும் என்றனர்.


Next Story