அரசு பஸ்சை போலீஸ் நிலையத்தில் நிறுத்திவிட்டு சென்ற டிரைவர்


அரசு பஸ்சை போலீஸ் நிலையத்தில் நிறுத்திவிட்டு சென்ற டிரைவர்
x

வேகமாக சென்றதை பெண் பயணி செல்போனில் படம் பிடித்ததால் அரசு பஸ்சை டிரைவர் போலீஸ் நிலையத்தில் நிறுத்திவிட்டு சென்றார்.

ஈரோடு

கடத்தூர்

வேகமாக சென்றதை பெண் பயணி செல்போனில் படம் பிடித்ததால் அரசு பஸ்சை டிரைவர் போலீஸ் நிலையத்தில் நிறுத்திவிட்டு சென்றார்.

போக்குவரத்து நெரிசல்

கர்நாடக மாநிலம் மைசூருவில் இருந்து ஈரோடு நோக்கி அரசு பஸ் நேற்று காலை வந்து கொண்டிருந்தது. ஈரோட்டை சேர்ந்த சின்னச்சாமி என்பவர் பஸ்சை ஓட்டினார். ரவி என்பவர் கண்டக்டராக இருந்தார். 30-க்கும் மேற்பட்ட பயணிகள் பஸ்சில் பயணம் செய்தனர். பஸ் வரும் வழியில் திம்பம் மலைப்பாதையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளது. இதனால் காலை 9.12-க்கு சத்தியமங்கலத்துக்கு வரவேண்டிய பஸ் 9.25-க்குதான் வந்ததாக தெரிகிறது.

இதனால் சரியான நேரத்துக்கு செல்லவேண்டுமே என்று டிரைவர் சின்னச்சாமி சத்தியமங்கலத்தில் இருந்து ஈரோடு நோக்கி பஸ்சை வேகமாக ஓட்டியதாக கூறப்படுகிறது.

தடுமாறி விழுந்த பெண்

கோபி அருகே அரசூர் என்ற இடத்தில் பஸ் ஒரு வளைவில் திரும்பும்போது பஸ்சுக்குள் இருந்த ஒரு பெண் தடுமாறி இருக்கையில் பஸ்சுக்குள்ளேயே தடுமாறி விழுந்தார்.

இதைப்பார்த்த அருகே பயணம் செய்த பெண் ஒருவர் டிரைவரிடம் சென்று, ஏன் இப்படி பஸ்சை வேகமாக ஓட்டுகிறீர்கள் என்று கேட்டுள்ளார். மேலும் தன்னுடைய செல்போனில் டிரைவர் வேகமாக ஓட்டுவதையும் அவர் படம் பிடித்துள்ளார்.

போலீஸ் நிலையத்தில் நிறுத்தினார்

ஏற்கனவே நேரமாகிவிட்ட கோபத்தில் இருந்த டிரைவர் சின்னச்சாமி திடீரென பஸ்சை கோபி போலீஸ் நிலையத்துக்கு ஓட்டிச்சென்றார். பின்னர் பயணிகளிடம் எனக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு செல்கிறேன் என்று கூறிவிட்டு சென்றுவிட்டார். இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தனர்.

இந்த நிலையில் கோபி போலீசார் செல்போனில் படம் பிடித்த பெண்ணிடம் என்ன நடந்தது என்று விசாரித்தனர். பின்னர் சம்பந்தப்பட்ட போக்குவரத்து கிளைக்கு தகவல் அனுப்பி வேறு பஸ்சை கோபி பஸ்நிலையத்துக்கு வரவழைத்தனர். அதன்பிறகு பயணிகளை அதில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Related Tags :
Next Story