டிரைவர் பலி
லோடுவேன் - லாரி மோதல் ;டிரைவர் பலி
வேளாங்கண்ணி:
வேதாரண்யம் அருகே ஆயக்காரன்புலம் பகுதியை சேர்ந்தவர் முருகன் மகன் செந்தில் (வயது 39). அதே பகுதியை சேர்ந்த கணேசன் மகன் பிரபு, சுப்பையன் மகன் தமிழ்மணி ஆகிய 3 பேரும் லோடு வேனில் வேளாங்கண்ணியில் இருந்து வேதாரண்யம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். வேனை செந்தில் ஓட்டினார். அப்போது வேதாரண்யம் சாலையில் காமேஸ்வரம் ஏரிக்கரை அருகே வந்தபோது எதிரே வந்த லாரி வேன் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் செந்தில், பிரபு, தமிழ்மணி ஆகிய 3 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் நாகை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சையில் இருந்த செந்தில் சிகிச்சை பலனின்றி இறந்தார். பிரபு மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து கிழையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.