லாரி மீது மோதிய கார் சாலையில் உருண்டதில் டிரைவர் பலி


லாரி மீது மோதிய கார் சாலையில் உருண்டதில் டிரைவர் பலி
x

லாரி மீது மோதிய கார் சாலையில் உருண்டதில் டிரைவர் உயிரிழந்தார்.

திருச்சி

துவரங்குறிச்சி:

மருத்துவமனைக்கு சென்றனர்

பெரம்பலூர் மற்றும் கடலூர் மாவட்டங்களை சேர்ந்த 6 பேர் மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு, மருத்துவ பரிசோதனைக்காக சென்றனர். பின்னர் அங்கிருந்து அவர்கள் மீண்டும் பெரம்பலூருக்கு காரில் சென்று கொண்டிருந்தனர். காரை பெரம்பலூர் மாவட்டம், லெப்பைக்குடிகாடு பகுதியை சேர்ந்த நிஹால் அகமது (வயது 30) ஓட்டினார்.

அந்த கார் மதுரை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திருச்சி மாவட்டம், துரவங்குறிச்சியை அடுத்த செவந்தாம்பட்டி பிரிவு சாலை அருகே வந்தபோது, முன்னால் சென்ற லாரி மீது மோதியது. இதில் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை நடுவில் உள்ள தடுப்புச்சுவரில் மோதி மறுபக்க சாலைக்கு சென்று உருண்டது.

சாவு

இதில் காரை ஓட்டி வந்த நிஹால்அகமது சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் அந்த காரில் பயணம் செய்த பெரம்பலூரை சேர்ந்த சாதிக் பாட்சா(48), அவரது மனைவி சம்சுஹிதா(42), கடலூர் மாவட்டம், வாகையூரைச் சேர்ந்த தமிழரசி(32), அரங்கூரைச் சேர்ந்த சுப்பிரமணி(47) ஆகிய 4 பேர் காயமடைந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த துவரங்குறிச்சி தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, காரில் சிக்கி இருந்தவர்களை மீட்டனர். இதையடுத்து அவர்களை தீயணைப்பு வாகனத்திலேயே துவரங்குறிச்சி அரசு மருத்துவமனையில் கொண்டு வந்து, சிகிச்சைக்காக சேர்த்தனர்.

போலீசார் விசாரணை

இதையடுத்து அவர்கள் மேல்சிகிச்சைக்காக மதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். உயிரிழந்த நிஹால்அகமது உடலை மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து துவரங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விபத்தில் காயமடைந்தவர்களை விரைவாக மீட்டு தீயணைப்பு வாகனத்திலேயே மருத்துவமனைக்கு கொண்டு சென்ற தீயணைப்புத்துறை வீரர்களை பொதுமக்கள் பாராட்டினர்.


Next Story