மூதாட்டியை தாக்கிய டிரைவர் கைது
மூதாட்டியை தாக்கிய டிரைவர் கைது செய்யப்பட்டார்.
நெகமம்,
நெகமம் அடுத்த செங்குட்டைப்பாளையத்தை சேர்ந்தவர் கண்டீஸ்வரன் (வயது 40). டிரைவர். இவருக்கும், அதே பகுதியில் பக்கத்து வீட்டை சேர்ந்த பேச்சியம்மாள் (70) என்பவருக்கும் இடையே முன் விரோதம் காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு கண்டீஸ்வரன் மது போதையில் பேச்சியம்மாளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
பின்னர் கண்டீஸ்வரன் தகாத வார்த்தைகளால் பேசவே தகராறு முற்றியது. மேலும் அங்கே இருந்த கட்டையை எடுத்து பேச்சியம்மாளை அடித்து உள்ளார். இதை தடுக்க வந்த மூதாட்டியின் மகன் காளிமுத்துவையும் அடித்தார். இதில் பேச்சியம்மாள், காளிமுத்து 2 பேரும் படுகாயம் அடைந்தனர். பின்னர் 2 பேரும் பொள்ளாச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து நெகமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கண்டீஸ்வரனை கைது செய்தனர்.