போட்டி, பொறாமைகளால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படக்கூடாது


போட்டி, பொறாமைகளால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படக்கூடாது
x

அரசு பள்ளிகளில் தலைமை ஆசிரியர், ஆசிரியர்களுக்கு இடையே உள்ள போட்டி, பொறாமைகளால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படக்கூடாது என்று கலெக்டர் வளர்மதி கூறினார்.

ராணிப்பேட்டை

ஆலோசனை கூட்டம்

ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், பள்ளி கல்வித்துறையின் சார்பில் பள்ளிகளை மேம்படுத்துவது மற்றும் தேர்ச்சி விகிதத்தை அதிகரிப்பது குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கி பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மாணவர்களின் எதிர்கால முன்னேற்றத்திற்கான ஒரு மைல் கல்லை எய்திட முழு மனதுடன் கல்வி கற்பிக்க வேண்டும். மாணவர்கள் பலதரப்பட்ட பொருளாதார சூழ்நிலைகளை கொண்ட குடும்பங்களில் இருந்து கல்வி கற்க பள்ளிகளுக்கு வருகின்றனர். அதற்கு ஏற்றவாறு மாணவர்களை தயார்படுத்த வேண்டும். இதில் ஆசிரியர்கள் தனி கவனம் செலுத்த வேண்டும்.

பாதிக்கப்படக்கூடாது

கழிவறைகள் பிரச்சினை, சுற்றுப்புறத்தில் தேவையற்ற புதர், செடி, கொடிகள் வளர்ந்திருந்தால் அதனை அகற்றுதல் வேண்டும். ஒவ்வொரு ஆசிரியரும் தங்களுடைய பள்ளியின் சுகாதாரத்தையும், சுற்றுச்சூழலையும் தனியார் பள்ளிகள் எவ்வாறு செய்கின்றனரோ அதே போன்று கவனம் செலுத்தி இவற்றை தூய்மையுடன் வைத்துக்கொள்ள உறுதி ஏற்க வேண்டும்.

தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இடையே உள்ள போட்டி, பொறாமைகளால் மாணவ, மாணவிகளின் கல்வி பாதிக்கப்படக் கூடாது.

பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்வி தடைப்பட அனுமதிக்கக் கூடாது. தகுதி வாய்ந்த மாணவர்கள் குறித்த தகவல்களை மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவிக்கலாம். அதேபோல உயர்கல்வி படிக்க விரும்பும் மாணவ- மாணவிகளின் கல்வி பொருளாதார சூழ்நிலை காரணமாக தடைபடுவதை தடுக்க சம்பந்தப்பட்ட பள்ளிகள் அவர்களுக்கு தேவையான கல்வி கடன் உதவிகள் தேவைப்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்கலாம்.

விழிப்புணர்வு

மாணவ- மாணவிகளின் மனம் அலைபாய்வதால் கல்வி கற்பது தடைபட்டு எதிர்காலம் கேள்விக்குறியாக செல்லும் வகையில் நடந்து கொள்வதை தவிர்க்க தொடர்ந்து விழிப்புணர்வுகளை ஆசிரியர்கள் வழங்கிட வேண்டும். மேலும் 18 வயதிற்கு கீழ் உள்ள மாணவ -மாணவிகள் வாகனங்கள் ஓட்ட அனுமதிக்கக் கூடாது. போதைப்பொருள் பழக்கம் கண்டறியப்படுவதை உடனுக்குடன் தெரிவிக்க வேண்டும்.

வருகிற ஆயுத பூஜை காலங்களில் தொடக்கப்பள்ளியில் மாணவர்கள் சேர்க்கைக்கு சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் கட்டாயம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) முரளி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story