எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் ரூ.13 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்


எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் ரூ.13 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்
x

புதிதாக வாங்கிய குளிர்சாதன பெட்டி பழுதான வழக்கில் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் ரூ.13 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என திருவாரூர் நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டது.

திருவாரூர்

புதிதாக வாங்கிய குளிர்சாதன பெட்டி பழுதான வழக்கில் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் ரூ.13 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என திருவாரூர் நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டது.

குளிர்சாதன பெட்டி

திருவாரூர் மாவட்டம் எட்டியலூர் மேலத்தெருவை சேர்ந்தவர் குணசேகரன். இவர் கடந்த ஜனவரி மாதம் 5-ந் தேதி திருவாரூரில் இயங்கி வரும் ஒரு எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் ரூ.23 ஆயிரத்து 500 கொடுத்து குளிர்சாதன பெட்டி(பிரிட்ஜ்) வாங்கியுள்ளார். அதற்கான வாரண்டி கார்டு குறித்து கேட்டதற்கு அது குளிர்சாதன பெட்டியில் இருப்தாக கூறியுள்ளனர்.

இதனையடுத்து ஜனவரி மாதம் 8-ந் தேதி குளிர் சாதன நிறுவன சேவை மைய மெக்கானிக், குணசேகரன் வீட்டிற்கு வந்து வாரண்டி கார்டு அட்டை பெட்டியில் இல்லை என்று தெரிவித்து விட்டு குளிர்சாதன பெட்டியை இயங்க வைத்துவிட்டு சென்றுள்ளார்.

தண்ணீர் கசிவு

இந்த நிலையில் அடுத்த 2 நாட்களில் குளிர்சாதன பெட்டியின் அடிபாகத்தில் இருந்து தண்ணீர் கசிவு ஏற்பட்டுள்ளது. இது குறித்து எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்திற்கு தொடர்பு கொண்டு குணசேகரன் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து மெக்கானிக் வந்து சரி செய்து விட்டு சென்றுள்ளார். மீண்டும் அடுத்த நாளும் தண்ணீர் கசிவு ஏற்பட்டுள்ளதால் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தை தொடர்பு கொண்ட குணசேகரன், தனக்கு வேறு குளிர்சாதன பெட்டியை மாற்றித்தருமாறு கேட்டுள்ளார். மேலும் கடிதமும் அனுப்பியுள்ளார். அதற்கும் அந்த நிறுவனம் சரியான பதில் அளிக்கவில்லை.

நுகர்வோர் ஆணையத்தில் வழக்கு

இதனையடுத்து பழுதான குளிர்சாதன பெட்டிக்கான பணத்தை திருப்பித் தர வேண்டும் எனவும், மன உளைச்சல் மற்றும் சேவை குறைபாட்டிற்கு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் திருவாரூர் நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் குணசேகரன் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சக்கரவர்த்தி, உறுப்பினர்கள் பாக்கியலட்சுமி, லட்சுமணன் அடங்கிய அமர்வு நேற்று தீர்ப்பு அளித்தது.

ரூ.13 ஆயிரம் இழப்பீடு

அந்த தீர்ப்பில், குணசேகரன் வாங்கிய குளிர்சாதன பெட்டியில் 2 நாட்களில் தண்ணீர் கசிவு ஏற்பட்டுள்ளது. இது குறித்து நிறுவனத்திடம் தெரிவித்தும் அதற்கான வாரண்டி கார்டு மற்றும் பழுதை முறையாக சரி செய்து வழங்காமல் இருந்து வருவது சேவை குறைபாடு என இந்த ஆணையம் கருதுகிறது.

எனவே எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம், புகார்தாரருக்கு குளிர்சாதன பெட்டிக்கான தொகை ரூ.23,500-ஐ திருப்பி வழங்க வேண்டும். மேலும் புகார்தாரரிடம் உள்ள பழுதான குளிர்சாதனபெட்டியை திரும்ப பெற்றுக் கொள்ள வேண்டும். இதனால் அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் பொருள் நஷ்டத்திற்கு ரூ.10 ஆயிரமும், வழக்கு செலவு தொகையாக ரூ.3 ஆயிரமும் வழங்க வேண்டும்.

இந்த உத்தரவு பிறப்பித்த 6 வாரத்திற்குள் வழங்க வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் 9 சதவீத ஆண்டு வட்டியுடன் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.


Next Story