பட்டியலில் பெயர் வரவில்லை என்று கூறி பணியாளர்கள் மறியல்
குளமங்கலம் அருகே 100 நாள் வேலைக்கு பட்டியலில் பெயர் வரவில்லை என்று கூறி பணியாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
100 நாள் வேலை
கிராமங்களில் அனைவருக்கும் 100 நாட்கள் வேலை வழங்க வேண்டும் என்று தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ஏரி, குளம், சாலை உள்ளிட்ட அடிப்படை மராமத்துப் பணிகள் நடந்து வருகிறது. ஒரு வருடத்திற்கு ஒவ்வொரு குடும்பத்திற்கும் 100 நாட்கள் வேலை வழங்கப்படுகிறது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக 100 நாட்கள் முழுமையாக பணிகள் வழங்கப்படவில்லை என்றும் பொதுமக்கள் கூறி வருகின்னர்.
சாலை மறியல்
இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகில் உள்ள குளமங்கலம் வடக்கு ஊராட்சியில் இந்த வாரத்திற்கு சுமார் 300 பேருக்கு பணி வழங்க கேட்கப்பட்டிருந்த நிலையில் 240 பேருக்கு பணிகள் ஒதுக்கி பட்டியல் வெளியாகி உள்ளது. 60 பேருக்கு வேலைக்கான பட்டியலில் பெயர் வரவில்லை. இதனையறிந்த பொதுமக்கள் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு ஒன்று கூடி அந்த வழியாக சென்ற டவுன் பஸ்சை மறித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த திருவரங்குளம் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வராஜ் மற்றும் கீரமங்கலம் போலீசார், ஊராட்சி நிர்வாகத்தினர் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் அடுத்தடுத்த வேலைக்கான பட்டியலில் விடுபட்ட பணியாளர்கள் அனைவரின் பெயர்களும் வெளியாகும் என்று கூறிய பிறகு சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. அதன் பிறகு நிறுத்தப்பட்ட அரசு டவுன்பஸ் இயக்கப்பட்டது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.