நுழைவு வாயில் அடைக்கப்பட்டு கட்டுமான பணிகள் தீவிரம்


நுழைவு வாயில் அடைக்கப்பட்டு கட்டுமான பணிகள் தீவிரம்
x
தினத்தந்தி 12 July 2023 6:45 PM GMT (Updated: 12 July 2023 6:46 PM GMT)

ரூ.20 கோடியில் ராமநாதபுரத்தில் புதிய பஸ் நிலையம் கட்டும் பணிகள் தொடங்கி உள்ளதால் பஸ் நிலைய நுழைவு வாயில் அடைக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம்

ரூ.20 கோடியில் ராமநாதபுரத்தில் புதிய பஸ் நிலையம் கட்டும் பணிகள் தொடங்கி உள்ளதால் பஸ் நிலைய நுழைவு வாயில் அடைக்கப்பட்டுள்ளது.

பஸ் நிலையம் கட்டும் பணி

ராமநாதபுரம் நகரில் தற்போது உள்ள பஸ்நிலையம் இடிக்கப்பட்டு புதிய பஸ்நிலையம் கட்டப்பட உள்ளது. இதற்காக ரூ.20 கோடி திட்ட மதிப்பீட்டில் அனுமதி வழங்கப்பட்டு பஸ்நிலையம் கட்டும் பணி தொடங்கி உள்ளது. முன்னதாக பஸ்நிலையத்தில் உள்ள கடைகள் அனைத்தும் காலி செய்யப்பட்டு விரிவாக்கம் செய்வதற்காக சந்தை பகுதி கட்டிடங்கள் இடிக்கப்பட்டு உள்ளன. புதிய பஸ்நிலைய நுழைவு வாயில் பகுதி மூடப்பட்டுவிட்டது. தற்போது பஸ்கள் அனைத்தும் இடிக்கப்பட்ட சந்தை வழியாக உள்ளே சென்று வெளியேறி வருகின்றன. புதிய பஸ்நிலையம் கட்டும் வரை பஸ்கள் அனைத்தும் பழைய பஸ் நிலையம் பகுதியில் இருந்து இயக்கப்பட உள்ளது. இதற்கேற்ப பழைய பஸ்நிலைய பகுதியில் சாலைகள், கழிப்பறைகள் கட்டப்பட்டு வருகின்றன.

பஸ்கள் இயக்கம்

புதிய பஸ்நிலையத்தில் ஏற்கனவே 45 கடைகள் இருந்தன. ஆனால் பழைய பஸ் நிலையத்தில் வியாபாரிகளின் அனுமதியுடன் தற்போது 11 கடைகள் மட்டும் வைத்து கொள்ள அனுமதி வழங்கப்பட உள்ளது. பழைய பஸ்நிலைய பணிகள் அனைத்தும் ஏறத்தாழ முடிவடையும் நிலையில் உள்ளன. இந்த பணிகள் நிறைவடைந்து பஸ்கள் வந்து செல்ல தயாரானதும் அங்கிருந்து ராமேசுவரம், தூத்துக்குடி போன்ற பகுதிகளுக்கான பஸ்கள் இயக்கப்பட உள்ளன. இதுதவிர, ராமநாதபுரம் நுழைவு வாயில் மூலக்கொத்தளம் பகுதியில் இருந்து மதுரை உள்ளிட்ட புறநகர் பஸ்கள் செல்லும் வகையில் வீட்டுவசதி வாரியத்திடம் அனுமதி பெறப்பட்டுள்ளதால் அங்கு பணிகள் நடைபெற உள்ளன. அந்த பணிகள் முடிவடைந்ததும் மதுரை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள் அங்கிருந்து இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கோரிக்கை மனு

இந்நிலையில் சந்தை கடை பகுதி இடிக்கப்பட்டுள்ளதால் அதற்கு மாற்றாக உள்ளுர் சந்தை வியாபாரிகளுக்கு லெட்சுமிபுரம் காலரா கொட்டகை பகுதியில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இவர்களில் சிலர் தங்களுக்கு அந்த இடம் ஏற்றதில்லை என்றும் அதிக தூரம் என்பதால் மக்கள் வந்து செல்ல மாட்டார்கள் என்றும் கூறி தங்களுக்கு நகர் பகுதியில் இடம் ஒதுக்கி தரக்கோரி ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.


Next Story