புதிய பஸ் நிலைய விரிவாக்க பணியை விரைந்து முடிக்க வேண்டும்
கூடலூரில் புதிய பஸ் நிலைய விரிவாக்க பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கூடலூர்
கூடலூரில் புதிய பஸ் நிலைய விரிவாக்க பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
விரிவாக்க பணி
தமிழகம், கர்நாடகா, கேரளா என 3 மாநிலங்கள் இணையும் இடத்தில் கூடலூர் புதிய பஸ் நிலையம் உள்ளது. தினமும் வெளிமாநில மக்கள் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானவர்கள் வருகின்றனர். இதனால் 3 மாநில அரசு பஸ்களும் வந்து செல்கிறது. ஆனால் போதிய இடவசதி இல்லாததால் சாலையோரம் பஸ்கள் நிறுத்தப்பட்டு வருகிறது. இதேபோல் பயணிகளும் வெயில், மழை என எந்த காலநிலையாக இருந்தாலும் சாலையோரம் மற்றும் வணிக நிறுவனங்களின் முன்பு பஸ்சுக்காக காத்து நிற்கின்றனர். இதனால் பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று கூடலூர், பந்தலூர் தாலுகா பொதுமக்கள் உள்பட அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர்.
நிறைவு பெறவில்லை
இதைத்தொடர்ந்து கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.4¾ கோடி நிதி ஒதுக்கப்பட்டு வணிக நிறுவனங்கள், போக்குவரத்து பணிமனை, கிளை அலுவலகம் மற்றும் பஸ்கள் நிற்பதற்கான இடங்கள் கட்டும் பணி தொடங்கப்பட்டது. ஆனால் இதுவரை பணிகள் நிறைவு பெறவில்லை. இதனால் பஸ் நிலையத்துக்கு வரும் பயணிகள் தொடர்ந்து பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர். இதேபோல் வெளியூர்களில் இருந்து வரும் பஸ்களும் தேசிய நெடுஞ்சாலையில் நிறுத்த வேண்டிய நிலை காணப்படுகிறது.
கூடுதல் நிதி
இதனிடையே கூடலூர் பகுதியில் 2 மாதங்கள் கழித்து பருவமழை காலம் தொடங்க உள்ளதால் பணிகள் விரைவாக நிறைவு பெறுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர். இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது, கூடலூர் பஸ் நிலைய விரிவாக்க பணிகள் 80 சதவீதம் முடிவடைந்து விட்டது. கூடுதல் நிதி தேவைப்படுவதால், அதை ஒதுக்கியவுடன் பணி விரைவாக மேற்கொள்ளப்படும். தொடர்ந்து ஒரு மாதத்திற்குள் பணிகள் முழுமை பெறும் என்றனர். எனவே கூடுதல் நிதியை ஒதுக்கி பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறையினருக்கு, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.