தவறி விழுந்த விவசாயி மின்வேலியில் சிக்கி பலி


தவறி விழுந்த விவசாயி மின்வேலியில் சிக்கி பலி
x

வயல் வரப்பில் தவறி விழுந்த விவசாயி மின்வேலியில் சிக்கி பலியானார். உடன் சென்ற நாயும் செத்தது.

பெரம்பலூர்

விவசாயி

சேலம் மாவட்டம், ஆத்தூர் தாலுகா, அம்மம்பாளையத்தை சேர்ந்தவர் கோவிந்தன்(வயது 70). இவர் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு தனது குடும்பத்தினருடன் பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, அனுக்கூர் குடிகாடு கிராமத்திற்கு குடி பெயர்ந்து வசித்து வந்தார். பின்னர், கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு எசனை கிராமத்தில் ஏரிக்கரை அருகே உள்ள விவசாய நிலத்தினை சொந்தமாக வாங்கி, அந்த காட்டு கொட்டகையில் வசித்து விவசாயம் செய்து வந்தார். இவருக்கு ராமாயி என்ற மனைவியும், 2 மகள்களும், மணிவேல் என்ற மகனும் இருந்தனர். 2 மகள்களுக்கும் திருமணமாகி விட்டது. ராமாயி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இந்த நிலையில், கோவிந்தன் தனது மகனுடன் கடந்த ஒரு மாதத்திற்கு முன்புதான் எசனை கிராமத்தில் வாடகை வீட்டிற்கு குடிபெயர்ந்து வசித்து வந்தார்.

தவறி விழுந்து...

இந்நிலையில் நேற்று காலை 8 மணியளவில் கோவிந்தன் வயலுக்கு குளிக்க சென்றார். அப்போது வரப்பில் நடந்து சென்றபோது, சோளக்காட்டின் வரப்பு ஓரத்தில் போடப்பட்டிருந்த மின்வேலியின் மீது அவர் தவறி விழுந்தார். இதில் அவர் மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

அப்போது அவர் வளர்த்த நாயும் அவருடன் சென்றது. அந்த நாயும் மின்வேலியில் சிக்கி மின்சாரம் தாக்கி செத்தது. இதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கோவிந்தன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story