ரூ.15 லட்சத்தை வேறு பீரோவில் வைத்து விட்டு திருட்டு போனதாக கூறிய விவசாயி
ரூ.15 லட்சத்தை வேறு பீரோவில் வைத்து விட்டு திருட்டு போனதாக கூறிய விவசாயியால் பரபரப்பு ஏற்பட்டது.
வாணியம்பாடி
ரூ.15 லட்சத்தை வேறு பீரோவில் வைத்து விட்டு திருட்டு போனதாக கூறிய விவசாயியால் பரபரப்பு ஏற்பட்டது.
வாணியம்பாடியை அடுத்த நெக்குந்தி பகுதியைச் சேர்ந்தவர் குணசேகரன் (வயது 52). விவசாயி. இவர் தனக்கு சொந்தமான இடத்தை கடந்த பிப்ரவரி மாதம் ரூ.20 லட்சத்துக்கு விற்றதாக கூறப்படுகிறது.
அதில் ரூ.5 லட்சம் வீடு கட்டும் செலவுக்காக பயன்படுத்தியதுபோக மீதம் இருந்த ரூ.15 லட்சத்தை மகளின் திருமண செலவுக்காக பீரோவில் வைத்திருந்துள்ளார்.
நேற்று காலை பீரோவில் பார்த்தபோது ரூ.15 லட்சத்தை யாரோ திருடிச் சென்று விட்டதாக குணசேகரன் வாணியம்பாடி தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
ஆனால் பணத்தை வேறொரு பீரோவில் வைத்திருந்ததை மறந்து விட்டு இவ்வாறு புகார் அளித்திருந்தார். போலீசார் அங்கு வந்து வீட்டை முழுவதுமாக சோதனை செய்தபோது மற்றொரு பீரோவில் ரூ.15 லட்சம் இருந்தது. அதைத் தொடர்ந்து பணத்தை போலீசார் அவரிடமே ஒப்படைத்து அறிவுரை வழங்கினர்.