விவசாயி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு


விவசாயி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
x
தினத்தந்தி 20 April 2023 12:15 AM IST (Updated: 20 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் கோர்ட்டில் விவசாயி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

விழுப்புரம்

விழுப்புரம்

விக்கிரவாண்டி தாலுகா ஆசூரை சேர்ந்தவர் கவியரசு (வயது 36), விவசாயி. இவர் நேற்று மதியம் தற்கொலை செய்துகொள்ள முடிவுசெய்து பெட்ரோல் கேனுடன் விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு வந்தார். அங்கு அவர் திடீரென, தான் வைத்திருந்த பெட்ரோல் கேனை எடுத்து திறந்து தன் மீது ஊற்றிக்கொள்ள முயன்றார். இதை சற்றும் எதிர்பாராத அங்கு பணியில் இருந்த கோர்ட்டு ஊழியர்கள் மற்றும் போலீசார் விரைந்து சென்று கவியரசுவை தடுத்து நிறுத்தி பெட்ரோல் கேனை பிடுங்கினர். பின்னர் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது அவர் கூறுகையில், எனது அக்காள் இளவரசியின் கணவா் அருள் திருமணமான 7 மாதத்திலேயே இறந்து விட்டார். குழந்தை இல்லை. அவருக்கு சேர வேண்டிய சொத்தை பிரித்துக் கொடுக்காமல் அருளின் அண்ணன் காலம் தாழ்த்தி வந்தார். இதனால் இளவரசி மிகவும் வறுமையில் வாடினார். எனவே சொத்தை பிரித்து தருமாறு கேட்டு விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்திலும், ஐகோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்ததில் இளவரசிக்கு சாதகமாக தீர்ப்பு வரப்பெற்றது. ஆனால் இதுநாள் வரையிலும் சொத்தை பிரித்துக்கொடுக்காமல் அருளின் அண்ணன் இருந்து வருகிறார். இதுகுறித்து பலமுறை கோர்ட்டில் முறையிட்டும், போலீசில் புகார் செய்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. எனவே அருளின் அண்ணன் மீது உரிய நடவடிக்கை எடுத்து இளவரசிக்கு சேர வேண்டிய சொத்தை பிரித்துத்தர வேண்டும் என்றார். இதை கேட்டறிந்த போலீசார், இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதோடு, நீதிமன்றத்தில் இதுபோன்ற அசம்பாவித செயலில் ஈடுபடக்கூடாது என்று கவியரசுவை எச்சரிக்கை செய்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தினால் விழுப்புரம் கோர்ட்டில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story