விவசாயி அதிரடி கைது


விவசாயி அதிரடி கைது
x
தினத்தந்தி 12 Sep 2023 12:00 AM GMT (Updated: 12 Sep 2023 12:00 AM GMT)

அவலாஞ்சி வனப்பகுதியில் 2 புலிகள் மர்மமான முறையில் இறந்தன. இந்த விவகாரத்தில் புலியை விஷம் வைத்து கொன்றதாக விவசாயி கைது செய்யப்பட்டார். அவர் தனது மாடுகளை புலிகள் தாக்கி கொன்ற ஆத்திரத்தில் விஷம் வைத்து கொன்றது அம்பலமானது.

நீலகிரி

ஊட்டி

அவலாஞ்சி வனப்பகுதியில் 2 புலிகள் மர்மமான முறையில் இறந்தன. இந்த விவகாரத்தில் புலியை விஷம் வைத்து கொன்றதாக விவசாயி கைது செய்யப்பட்டார். அவர் தனது மாடுகளை புலிகள் தாக்கி கொன்ற ஆத்திரத்தில் விஷம் வைத்து கொன்றது அம்பலமானது.

இந்த பரபரப்பு சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

2 புலிகள் சாவு

நீலகிரி மாவட்டம் 65 சதவீத வனப்பகுதிகளை கொண்டது. இங்கு காட்டு யானைகள், புலிகள், கரடிகள், மான்கள், சிறுத்தைகள் உள்பட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. நீலகிரியில் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதாக சமீபத்திய கணக்கெடுப்பில் தெரியவந்தது. இருப்பினும், கடந்த சில நாட்களாக புலிகள் இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்தநிலையில் கடந்த 9-ந் தேதி ஊட்டி தெற்கு வனச்சரகத்துக்கு உட்பட்ட அவலாஞ்சி அணைக்கு செல்லும் நீரோடை மற்றும் அதன் அருகே உள்ள வனப்பகுதியில் 2 புலிகள் மர்மமான முறையில் இறந்து கிடந்தன. இதைத்தொடர்ந்து நீலகிரி வன அதிகாரி கவுதம், ஊட்டி தெற்கு வனச்சரகர் (பொறுப்பு) சசிக்குமார் மற்றும் வனத்துறையினர் புலிகளின் உடலை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

பிரேத பரிசோதனை

இந்தநிலையில் நேற்று முன்தினம் முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் வெங்கடேஷ் மேற்பார்வையில், கால்நடை டாக்டர்கள் 2 புலிகளின் உடல்களை பிரேத பரிசோதனை செய்தனர். இதில் அவலாஞ்சி வனப்பகுதியில் இறந்தது, 2 ஆண் புலிகள் என்பது தெரிய வந்தது. தண்ணீரில் இறந்து கிடந்த புலிக்கு 8 வயது. அதன் உடலில் வெளிப்புற காயங்கள் இல்லை. புல்தரையில் இறந்து கிடந்த புலிக்கு 3 வயது. இந்த புலியின் முதுகெலும்பில் எலும்பு முறிவுடன், முதுகு மற்றும் கழுத்தில் வெளிப்புற காயங்கள் காணப்பட்டன. இதன் வயிற்றில் முள்ளம்பன்றி முட்கள், முடி மற்றும் இறைச்சி இருந்தது. ஆனால், 2 புலிகளின் கோரை பற்கள், நகங்கள் உள்பட உடலில் உள்ள அனைத்து பாகங்களும் அப்படியே இருந்தன.

தொடர்ந்து 2 புலிகளின் உடல் உள் உறுப்புகள் தடயவியல் மற்றும் பகுப்பாய்வுக்காக மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்காக கோவை மற்றும் ஐதராபாத்துக்கு அனுப்பப்பட்டு உள்ளன.

தீவிர விசாரணை

இந்தநிலையில் புலிகள் இறந்து கிடந்த பகுதியில் பசு மாடும் இறந்து கிடந்ததால் புலிகள் விஷம் வைத்து கொல்லப்பட்டதா? என்ற கோணத்தில் வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இதற்காக நீலகிரி உதவி வன பாதுகாவலர் (தலைமையிடம்) தேவராஜ் தலைமையில், உதவி வன பாதுகாவலர் சரவணன் உள்பட 20 பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டது.

இதற்கிடையே அவலாஞ்சி வனப்பகுதியில் 2 புலிகள் இறந்து கிடந்த பகுதியையொட்டி பட்டா நிலம், வீடுகள், உள்ளன. மேலும் பசு மாடும் இறந்து கிடந்ததால் அந்த பகுதியில் யாருடைய பசுமாடு இறந்தது என்பது குறித்து வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர்.

இதில் எமரால்டு பகுதியை சேர்ந்த விவசாயி சேகர் (வயது 58) என்பவரது பசுமாடு காணாமல் போனது தெரிய வந்தது. அவரிடம் விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

விஷம் வைத்து கொன்றது அம்பலம்

எமரால்டு பகுதியில் சேகர் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். மேலும் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பிலும் ஈடுபட்டு வருகிறார். இந்தநிலையில் கடந்த 2019-ம் ஆண்டு சேகரின் கால்நடைகள் புலி தாக்கி இறந்தன. இதேபோல் அந்த பகுதியில் பலரின் கால்நடைகளும் புலிகளின் தாக்குதலுக்கு உள்ளானது.

இந்தநிலையில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு மீண்டும் சேகரின் பசுமாடு புலி தாக்கி இறந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த அவர் இறந்த பசு மாட்டின் உடலில் விஷம் கலந்து அந்த பகுதியில் போட்டு உள்ளார். அதனை 8 வயது புலி தின்றதால் உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து சேகரை வனத்துறையினர் நேற்று இரவு அதிரடியாக கைது செய்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மற்றொரு புலி இறந்தது எப்படி?

இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:-

அவலாஞ்சி வனப்பகுதியில் 2 புலிகள் இறந்து கிடந்தது. அதில் தண்ணீரில் இறந்து கிடந்த புலியின் உடலில் பூச்சிக்கொல்லி மருந்து வாசனை அதிகளவில் இருந்தது. இதனால் விஷம் கலந்த இறைச்சியை தின்று புலி இறந்தது உறுதியானது. தற்போது விசாரணை அடிப்படையில் தண்ணீரில் இறந்து கிடந்த புலி விஷம் தின்றதால் உயிரிழந்தது தெரியவந்து உள்ளது.

ஆனால், புல் தரையில் இறந்து கிடந்த புலி விஷம் தின்றதால் தான் இறந்ததா? என்பது இதுவரை உறுதியாக தெரியவில்லை. அந்த புலியின் உடலில் காயங்கள் இருப்பதால் விஷம் தின்று இறந்து இருக்கலாம். அல்லது வேறு ஏதாவது வனவிலங்குடன் சண்டையிட்டு இறந்திருக்கலாம் என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடந்து வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story