தலைவாசல் அருகே, நிலத்தை விற்று பணம் கொடுக்க மறுத்ததால் விவசாயி அடித்துக்கொலைமகன் வெறிச்செயல்


தலைவாசல் அருகே, நிலத்தை விற்று பணம் கொடுக்க மறுத்ததால் விவசாயி அடித்துக்கொலைமகன் வெறிச்செயல்
x
சேலம்

தலைவாசல்

தலைவாசல் அருகே நிலத்தை விற்று பணம் கொடுக்க மறுத்ததால் விவசாயியை இரும்பு கம்பியால் அடித்துக்கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர்.

வீட்டில் முதியவர் பிணம்

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே வீரகனூர் குரும்பர் தெருவை சேர்ந்தவர் முத்துசாமி (வயது 82), விவசாயி. இவருடைய முதல் மனைவி அய்யம்மாள். 2-வது மனைவி அலமேலு. 2 மனைவிகளும் ஏற்கனவே இறந்து விட்டனர். இவர்களுடைய மகன் பெருமாள் (61). விவசாயி. இவர் தனது குடும்பத்துடன் தனியாக வசித்து வருகிறார்.

முத்துசாமி மனைவிகள் இறந்த நிலையில் அவரும் தனியாக வீட்டில் வசித்து வந்தார். இந்தநிலையில் நேற்று காலை நீண்ட நேரமாகியும் அவரது வீட்டு கதவு திறக்கப்படவில்லை. இதையடுத்து மதியம் 2 மணி அளவில்அருகில் உள்ளவர்கள் முத்துசாமி வீட்டை திறந்து பார்த்தனர்.

அப்போது அவர் இறந்து கிடந்தார். அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் இதுகுறித்து வீரகனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முதியவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பணம் கொடுக்க மறுப்பு

தொடர்ந்து போலீசார் அக்கம் பக்கத்தினர் மற்றும் முத்துசாமியின் மகன் பெருமாள் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். அப்போது பெருமாள் தந்தையை இரும்பு கம்பியால் அடித்துக்கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

போலீசாரிடம் அவர் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

அதன் விவரம் வருமாறு:-

முத்துசாமிக்கு வீரகனூரில் இருந்து தலைவாசல் செல்லும் வழியில் 3 ஏக்கர் விவசாய நிலம் இருந்தது. கடந்த 25 நாட்களுக்கு முன்பு 1.17 ஏக்கர் நிலத்தை விற்பனை செய்வதற்காக முத்துசாமி ஒப்பந்தம் செய்து முன்பணம் பெற்றுள்ளார். இதை தெரிந்து கொண்ட பெருமாள் நிலத்தை விற்பனை செய்த பணத்தில் தனக்கும் பங்கு கொடுங்கள் என்று தந்தையிடம் கேட்டுள்ளார். ஆனால் முத்துசாமி பணம் கொடுக்க மறுத்துள்ளார்.

மகன் கைது

இதுதொடர்பாக தந்தை-மகனுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அவர் ஏற்கனவே உனக்கு ஒரு ஏக்கர் நிலம் கொடுத்து விட்டேன். மீதமுள்ள நிலத்தை விற்பனை செய்து எனது சொந்த செலவை பார்த்து கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த பெருமாள் இரும்பு கம்பியால் தந்தையை சரமாரியாக அடித்துள்ளார். அதில் தலையில் பலத்த அடிபட்டு அவர் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டதாக பெருமாள் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கமலக்கண்ணன் வழக்குப்பதிவு செய்து பெருமாளை கைது செய்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story