தாக்குதலில் காயம் அடைந்த விவசாயி சாவு
குடியாத்தம் அருகே தாய், மகன் தாக்கியதில் காயமடைந்த விவசாயி சிகிச்சை பலனின்றி இறந்தார். இது தொடர்பாக பெண் கைது செய்யப்பட்டார்.
விவசாயி சாவு
குடியாத்தம் அடுத்த எர்த்தாங்கல் ஏரியான்பட்டி பகுதியை சேர்ந்தவர் பாரத் என்கிற குபேந்திரன் (வயது 56), விவசாயி. இவரை எர்த்தாங்கல் அடுத்த பரதராமிபட்டியை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் அரங்கன் மனைவி வளர்மதி (48), அவரது மகன் நவீன்குமார் (26) ஆகியோர் கடந்த சில நாட்களுக்கு முன் சரமாரியாக தாக்கி உள்ளனர்.
இதில் பலத்த காயமடைந்த அவர் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக வேலூர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
பெண் கைது
இந்த சம்பவம் தொடர்பாக குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி மேற்பார்வையில், தாலுகா இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியம், சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜெயந்தி, பழனிவேலு ஆகியோர் வழக்குப் பதிவு செய்து குபேந்திரனை கொலை செய்ததாக வளர்மதியை கைது செய்தனர். அவரது மகன் நவீன்குமாரை தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கண்டிப்பு
முன்னாள் ராணுவ வீரர் அரங்கன் கடந்த 15 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இவரது மனைவி வளர்மதி. இவர்களுக்கு நவீன்குமார் என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். ஏரியான்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பாரத் என்கிற குபேந்திரன், திருமணமாகாதவர். இவர் வளர்மதியின் வீட்டிற்கு சென்று வந்துள்ளார். அவரை வீட்டிற்கு வரக்கூடாது என வளர்மதி கூறியிருக்கிறார். அதேபோல் மகன் நவீன்குமாரும் குபேந்திரனை கண்டித்துள்ளார். இருப்பினும் குபேந்திரன் வளர்மதியின் வீட்டிற்கு வந்துள்ளார். கடந்த 14-ந் தேதி இரவு குபேந்திரன் வளர்மதியின் வீட்டின் அருகே தனது உறவினருடன் நடந்து சென்று கொண்டிருந்தபோது வளர்மதியும், அவரது மகன் நவீன்குமாரும் ஏன் இந்த பகுதிக்கு வந்தாய் என கேட்டு தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த அவர் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார் என தெரிவித்தனர்.