பாறையை வெடிவைத்து உடைத்து அகற்றிய விவசாயி கைது
ஆரணி அருகே அரசு புறம்போக்கு இடத்திலிருந்து பாறையை வெடிவைத்து உடைத்து அரசு இடத்தை ஆக்கிரமிப்பு செய்த விவசாயி கைது செய்யப்பட்டார்.
ஆரணி,
ஆரணி அருகே அரசு புறம்போக்கு இடத்திலிருந்து பாறையை வெடிவைத்து உடைத்து அரசு இடத்தை ஆக்கிரமிப்பு செய்த விவசாயி கைது செய்யப்பட்டார்.
விவசாயி
ஆரணியை அடுத்த அக்ராபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 41). விவசாயி. இவருக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலம் அதே பகுதியில் உள்ளது அதன் அருகில் சுமார் ஒரு ஏக்கர் அரசு புறம்போக்கு இடம் உள்ளது அந்த இடத்தில் பாறைகள் அதிக அளவில் உள்ளன.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு சரவணன் அந்த இடத்தில் இருந்த பாறையை அடிக்கடி தோட்டா வெடி வைத்து உடைத்து விற்பனை செய்து வந்ததாக அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன.
மேலும் அந்த இடத்தை ஆக்கிரமிப்பு செய்து விவசாயம் செய்ய நிலத்தினை சமன் செய்து வந்துள்ளார் என்பதும் தெரிய வந்தது. இது சம்பந்தமாக அப்பகுதியில் உள்ள கிராம மக்கள் ஆரணி வருவாய் கோட்டாட்சியருக்கும், தாசில்தாருக்கும் புகார் தெரிவித்தனர்.
அதன் பேரில் ஆரணி தாசில்தார் ரா.மஞ்சுளா மற்றும் அதிகாரிகள் அரசு புறம்போக்கு இடத்தில் இருந்த பாறையை உடைத்து சமன் செய்யப்பட்ட இடத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது சரவணன் அந்த இடத்தை ஆக்கிரமிப்பு செய்திருப்பதும் அங்கிருந்த பாறைகளை வெடிவைத்து அகற்றப்பட்டதும் தெரியவந்தது.
புகார்
இது சம்பந்தமாக ஆரணி தாசில்தார் ரா.மஞ்சுளா ஆரணி தாலுகா போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் ஆரணி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பி.புகழ், சப்- இன்ஸ்பெக்டர் ஷாபுதீன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விவசாயி சரவணனை கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.