கலெக்டரை விவசாயிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு


கலெக்டரை விவசாயிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு
x

தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிக்கு கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கு கூடுதல் இழப்பீடு வழங்கக் கோரி கடலூரில் நடந்த குறைகேட்பு கூட்டத்தில் கலெக்டரை விவசாயிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர்

கலெக்டரை முற்றுகையிட்ட விவசாயிகள்

கடலூர் மாவட்ட விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கி பேசிக்கொண்டிருந்தார். அப்போது தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் கொளஞ்சிநாதன் தலைமையில் பெரியப்பட்டு, பு.முட்லூர் மற்றும் அன்னவல்லி, ராமாபுரம், காரைக்காடு, சேடப்பாளையம், எம்.புதூர், அரிசிபெரியாங்குப்பம், சங்கொலிக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் திடீரென குறைகேட்பு கூட்ட அரங்கத்துக்கு திரண்டு வந்தனர்.

பின்னர் அவர்கள் கலெக்டரை முற்றுகையிட்டு, தேசிய நெடுஞ்சாலை 45 ஏ பணிக்கு நிலம் கையகப்படுத்தப்பட்டதில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கவில்லை. இதுபற்றி பலமுறை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் அவர்கள் அலட்சியமாக பதில் அளித்து வருகிறார்கள். இதுதொடர்பாக பல கட்ட போராட்டங்கள் நடத்தியும் கூடுதல் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை.

கூடுதல் இழப்பீடு

இதற்கிடையில் தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணி 90 சதவீதம் முடிந்து விட்டதாக தெரிகிறது. ஆகவே எங்களுக்கு கூடுதல் இழப்பீட்டை பெற்று தர வேண்டும் என்றனர். இதை கேட்ட கலெக்டர், இதுபற்றி விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். அதனை ஏற்றுக் கொண்ட விவசாயிகள் கலைந்து சென்றனர். முன்னதாக கோரிக்கை மனுவையும் கலெக்டரிடம் அளித்தனர்.

உரத்தட்டுப்பாடு

தொடர்ந்து விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு, பத்திரப்பதிவு அலுவலகங்களில் பத்திரப்பதிவு செய்ய அதிக கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. இதுபற்றி பொதுமக்கள் அறியும் வகையில் கட்டணத்தை பலகையில் எழுதி வைக்க வேண்டும். கம்மாபுரம், விருத்தாசலம் பகுதியில் உரத்தட்டுப்பாடு உள்ளது. இதை போக்க வேண்டும். வாய்க்கால்களை தூர்வாரி காவிரி கடைமடை வரை தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கொட்டாரம் பகுதியில் குரங்குகள் தொல்லையை தடுக்க வேண்டும். மக்காச் சோளத்தில் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த வேண்டும். மழைக்காலங்களில் வீணாக கடலில் கலக்கும் நீரை சேமிக்க வேண்டும். இரவு நேரங்களில் மின் தடையை போக்கி விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும். கூட்டுறவு வங்கிகளில் கடன் வழங்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை நிறைவேற்றி தருமாறு வலியுறுத்தினர்.

அதற்கு கலெக்டர் மற்றும் அதிகாரிகள், அனைத்து கோரிக்கைகளுக்கும் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

கூட்டத்தில் விவசாயிகள் செல்வராஜ், செந்தில்முருகன், அன்பழகன், மகாராஜன், மாதவன், குமரகுரு, ரவீந்திரன், வேல்முருகன், குஞ்சிதபாதம், சிவசக்திவேல், ரெங்கநாயகி, முருகானந்தம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story