விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில செயலாளர் ராஜா சிதம்பரம் தலைமையில், அந்த சங்கத்தை சேர்ந்த விவசாயிகள், மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தின் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அப்போது அவர்கள், பெரம்பலூரில் இருக்கும் மின் இணைப்புகள் எண்ணிக்கையை கணக்கிட்டு கூடுதலாக, புதிதாக மின்பகிர்மான கோட்டத்தினை உருவாக்கி செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். தமிழ்நாடு ஒழுங்குமுறை ஆணையத்தின் அறிவிப்பை காரணம் காட்டி வீட்டிற்கும், விவசாயத்திற்கும் இலவச மின்சாரம் வழங்கும் சலுகையை நிறுத்தக்கூடாது. 1.4.2022-க்கு பின்பு தயார் நிலை பதிவேட்டில் பதிவு செய்த 400 விவசாயிகளுக்கும் விவசாய மின் இணைப்பு வழங்கும் வகையில் இலக்கீட்டை உயர்த்தி அறிவிக்க வேண்டும். கடந்த நவம்பர் மாதம் 28-ந்தேதி பெரம்பலூர் வந்த முதல்-அமைச்சரிடம் சங்கத்தின் சார்பில் கொடுக்கப்பட்ட கோரிக்கை மனுவின் மீது தாமதிக்காமல் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்
பழுதடைந்த மீட்டரை மாற்றிட, வயரை மாற்றிட, மின் இணைப்பு கொடுக்க தற்போது கடுமையாக உயர்த்தப்பட்ட கட்டணத்தை திரும்பப்பெற வேண்டும். ஆன்லைனில் மின் கட்டணம் செலுத்துபவர்களிடம் கணக்கில் கட்டணம் ஏறவில்லை என்று அபராதம் விதித்து வரும் முறையை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
இதையடுத்து அவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு வட்ட மேற்பார்வை பொறியாளர் அம்பிகாவிடம் கோரிக்கை மனுவை அளித்தனர்.