சாலையில் தென்னங்கன்றுகள் நட்ட விவசாயிகளால் பரபரப்பு


சாலையில் தென்னங்கன்றுகள் நட்ட விவசாயிகளால் பரபரப்பு
x
சேலம்

ஓமலூர்:-

ஓமலூர் அருகே ஜல்லி கற்கள் ஏற்றிக்கொண்டு டிப்பர் லாரிகள் செல்ல எதிர்ப்பு தெரிவித்து சாலையில் தென்னங்கன்றுகள் நட்ட விவசாயிகளால் பரபரப்பு ஏற்பட்டது.

ஜல்லி கிரஷர்கள்

ஓமலூர் அருகே நடுப்பட்டி ஊராட்சி காக்காயன்காடு பகுதியில் 3 ஜல்லி கிரஷர்கள் இயங்கி வருகின்றன. கடந்த 2010-ம் ஆண்டு ஒன்றிய பொது நிதியில் காக்காயன்காடு பகுதியில் சாலை அமைக்கப்பட்டது. இந்த சாலையில் கிரஷருக்கு டிப்பர் லாரிகள் சென்று வந்தன. இதனால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாக கூறிய விவசாயிகள், டிப்பர் லாரிகள் அந்த சாலை வழியாக செல்லக்கூடாது என கடந்த சில மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இது தொடர்பாக சில வாரங்களுக்கு முன்பு காடையாம்பட்டி தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் தமிழரசி தலைமையில் விவசாய சங்கங்கள் மற்றும் கிரஷர் உரிமையாளர்கள் கலந்து கொண்ட அமைதி பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது இந்த சாலை பிரச்சினை தொடர்பாக வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ளதால் தற்போது உள்ள நிலையிலேயே ரோட்டை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும், காலை, மாலை, இரவு நேரங்களில் யாருக்கும் பாதிப்பில்லாத வகையில் டிப்பர் லாரிகளை இயக்கிக்கொள்வது எனவும் முடிவு செய்யப்பட்டது.

தென்னங்கன்று

இந்த நிலையில் நேற்று காக்காயன்காடு பகுதியை சேர்ந்த விவசாயிகள் ஒன்றிய பொது நிதியில் அமைக்கப்பட்ட சாலை பட்டா நிலத்தில் உள்ளது என கூறி அந்த ரோட்டில் தென்னங்கன்றுகளை நட்டனர். இது பற்றி தகவல் அறிந்த கிரஷர் உரிமையாளர்கள் மற்றும் கிரஷர் பணியாளர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டனர். அதேபோல் ஏராளமான விவசாயிகளும் திரண்டதால் பதற்றமான சூழ்நிலைஉருவானது.

இது குறித்து தகவல் அறிந்ததும் ஓமலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு சங்கீதா, இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் ஆகியோர் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும் காடையாம்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் ராமச்சந்திரன், வருவாய் ஆய்வாளர் முருகேசன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் ஊராட்சி பொது நிதியில் போடப்பட்ட ரோட்டில் நடப்பட்ட தென்னங்கன்றுகளை அகற்ற பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டது. ஆனால் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க நிர்வாகிகள் இது பட்டா நிலம் எனவும், தென்னங்கன்றுகளை அகற்றினால் தீக்குளிப்பதாகவும் எச்சரித்தனர்.

வழக்குப்பதிவு

இதையடுத்து போலீசார் மற்றும் அதிகாரிகள் உள்பட அனைவரும் கலைந்து சென்றனர். இந்த நிலையில் ஊராட்சி ஒன்றிய பொது நிதியில் போடப்பட்ட சாலையை சேதப்படுத்தி தென்னங்கன்றுகளை நடவு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி காடையாம்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் ராமச்சந்திரன் தீவட்டிப்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். இதன் பேரில் 5-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story