வாலிபரை கட்டையால் அடித்துக்கொன்ற மாமனார்
வாலிபரை கட்டையால் அடித்துக்கொன்ற மாமனாரை போலீசார் கைது செய்தனர்.
ராஜபாளையம்,
வாலிபரை கட்டையால் அடித்துக்கொன்ற மாமனாரை போலீசார் கைது செய்தனர்.
மனைவியை கொல்ல முயற்சி
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள மீனாட்சிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 27). கூலி தொழிலாளியான இவருக்கும் அதேபகுதியை சேர்ந்த முத்துக்குட்டி என்பவருடைய மகள் மாசானத்துக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு ஆண், ஒரு பெண் குழந்தைகள் உள்ளனர்.
சில மாதங்களாக நாகராஜ் வேலைக்கு செல்லாமல் மதுகுடித்துவிட்டு மாசானத்திடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மாமனார் முத்துக்குட்டி, நாகராஜை கண்டித்துள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த அவர், தன் மனைவி மாசானத்தை கொலை செய்ய முயன்றதாக கூறப்படுகிறது.
போலீசில் புகார்
இதுகுறித்து மாசானம் ராஜபாளையம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததாகவும், ஆனால் புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.
இருப்பினும் நாகராஜ் தனது மனைவியை தொடர்ந்து அடித்து தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று பகலில் மாசானம் அருகே உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தார். அப்போது முத்துக்குட்டிக்கும், நாகராஜூக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
அடித்துக்கொலை
கைகலப்பு ஏற்பட்ட நிலையில் வீட்டில் இருந்த கட்டையால் நாகராஜை, முத்துக்குட்டி தாக்கினார். இதில் பலத்த காயம் அடைந்த நாகராஜ் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த தெற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நாகராஜ் உடலை மீட்டு ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
துணை சூப்பிரண்டு பிரீத்தி, தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சார்லஸ் விசாரணை மேற்கொண்டு, முத்துக்குட்டியை கைது செய்தனர். மருமகனை மாமனார் அடித்துக்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.