திட்டக்குடி அருகே காதல் திருமணம் செய்த என்ஜினீயர் அடித்துக்கொலை மாமனார் வெறிச்செயல்


திட்டக்குடி அருகே காதல் திருமணம் செய்த என்ஜினீயர் அடித்துக்கொலை மாமனார் வெறிச்செயல்
x
தினத்தந்தி 13 July 2023 12:15 AM IST (Updated: 13 July 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

திட்டக்குடி அருகே காதல் திருமணம் செய்த என்ஜினீயரை அடித்துக்கொன்ற மாமனார் கைது செய்யப்பட்டார்.

கடலூர்

திட்டக்குடி,

கடலூா் மாவட்டம் திட்டக்குடி அடுத்த நிதிநத்தம் கிராமம் நடுத்தெருவை சேர்ந்தவர் பூமாலை மகன் ரகுபதி(வயது 35). இவரும் பக்கத்து வீட்டை சேர்ந்த செல்வராஜ் மகள் சத்யா(32) என்பவரும் காதலித்து கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு சமித்(10), தஷ்வந்த்(5) ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.

என்ஜினீயரான ரகுபதி வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்து கூலி வேலை செய்து வந்தார்.

இதற்கிடையே குடி பழக்கத்திற்கு ஆளான ரகுபதி தினமும் மதுகுடித்து விட்டு வீட்டுக்கு வந்து சத்யாவை அடித்து துன்புறுத்தி வந்ததாக தெரிகிறது. இதுகுறித்து சத்யா தனது பெற்றோரிடம் கூறி உள்ளார். அவர்களும் ரகுபதியை கண்டித்துள்ளனர்.

அடித்துக்கொலை

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவும், ரகுபதி மதுகுடித்து விட்டு வந்து சத்யாவிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதுபற்றி அறிந்த செல்வராஜ், தனது மனைவி சுசீலாவுடன் அங்கு வந்து தகராறு குறித்து தட்டிக்கேட்டார். இதில் ஆத்திரமடைந்த ரகுபதி, அருகில் இருந்த செங்கல்லால் சுசீலாவை தாக்கியதாக தெரிகிறது. இதில் அவருக்கு முகத்தில் காயம் ஏற்பட்டது.

இதைபார்த்த செல்வராஜ், அருகில் இருந்த கட்டையால் ரகுபதியை சரமாரியாக தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த ரகுபதி சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்து உயிரிழந்தார்.

மாமனார் கைது

இதுபற்றி தகவல் அறிந்த கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம், திட்டக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு காவியா மற்றும் ஆவினங்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கொலை பற்றி விசாரணை நடத்தினர்.

மேலும் காயமடைந்த சுசீலாவை சிகிச்சைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து செல்வராஜை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story