கொடைக்கானலில் மகள் வாயில் விஷத்தை ஊற்றி கொல்ல முயன்ற தந்தை கைது
பயிற்சி மையத்தில் மலர்ந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மகள் வாயில் விஷத்தை ஊற்றி கொல்ல முயன்ற தந்தை கைது செய்யப்பட்டார். தாய் உள்பட 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
பயிற்சி மையத்தில் மலர்ந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மகள் வாயில் விஷத்தை ஊற்றி கொல்ல முயன்ற தந்தை கைது செய்யப்பட்டார். தாய் உள்பட 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
பயிற்சி மையத்தில் மலர்ந்த காதல்
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஆனந்தகிரி 1-வது தெருவை சேர்ந்தவர் எபினேசர் சாமுவேல் ராஜா (49). அவருடைய மகள் ஜெர்ஷாஜெர்லி (22). பி.இ. பட்டதாரியான இவர், தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்தில் தங்கியிருந்து யூ.பி.எஸ்.சி. தேர்வுக்கு படித்து வந்தார்.
அப்போது, அதே பயிற்சி மையத்தில் படித்த தூத்துக்குடி அகரம் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் ஜெர்ஷாஜெர்லிக்கு காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் ஜெர்ஷாஜெர்லிக்கு, அவரது பெற்றோர் வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து வந்தனர்.
அப்போது, தான் ஒருவரை காதலிப்பதாகவும் அவரையே திருமணம் செய்ய இருப்பதாகவும் அவர் கூறினார். இதற்கிடையே காதலனின் குடும்பத்தினர், ஜெர்ஷாஜெர்லி பெற்றோரிடம் பெண் கேட்டு வந்தனர். அப்போது 6 மாதம் கழித்து திருமணம் செய்து வைப்பதாக கூறினர்.
விஷம் ஊற்றி கொல்ல முயற்சி
இந்தநிலையில் நேற்று முன்தினம் மாணவியின் தந்தை எபினேசர் சாமுவேல் ராஜா, தாய் ஜூலியர் தங்கம் (46), உறவினர் வினோத் ராஜா ஆகியோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜெர்ஷாஜெர்லியிடம் தாங்கள் பார்த்த மாப்பிள்ளையை தான் திருமணம் செய்ய வேண்டும் என்று வற்புறுத்தினர்.
இதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததால் ஜெர்ஷாஜெர்லியை சரமாரியாக தாக்கினர். மேலும் தாங்கள் வைத்திருந்த விஷத்தை ஜெர்ஷாஜெர்லியின் வாயில் ஊற்றி 3 பேரும் அவரை கொல்ல முயற்சித்ததாக தெரிகிறது.
இதனால் சத்தம் போட்ட, ஜெர்ஷாஜெர்லியை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக, கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக வத்தலக்குண்டுவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கைது-வலைவீச்சு
இதுகுறித்து கொடைக்கானல் போலீஸ் நிலையத்தில் ஜெர்ஷாஜெர்லி புகார் கொடுத்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பாஸ்டின்தினகரன் வழக்குப்பதிவு செய்து எபினேசர் சாமுவேல் ராஜாவை கைது செய்தார்.
மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய ஜூலியர் தங்கம், வினோத் ராஜா ஆகியோரை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு (பயிற்சி) அருண் கபிலன் கொடைக்கானல் பகுதியில் விசாரணை நடத்தினார்.