கத்தியால் வெட்டப்பட்ட தந்தை சிகிச்சை பலனின்றி சாவு


கத்தியால் வெட்டப்பட்ட தந்தை சிகிச்சை பலனின்றி சாவு
x

ராணிப்பேட்டை அருகே மகள்களை கிண்டல் செய்ததை தட்டிக்கேட்டபோது, கத்தியால் வெட்டப்பட்ட தந்தை சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுதொடர்பாக 2 வாலிபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

ராணிப்பேட்டை

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

தட்டிக்கேட்ட தந்தை மீது தாக்குதல்

ராணிப்பேட்டை அருகே உள்ள லாலாபேட்டை பகுதியை சேர்ந்தவர் சுந்தரேசன் (வயது 48). தனியார் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவரது இரண்டு மகள்கள் வாலாஜாவில் உள்ள கல்லூரியில் படித்து வருகின்றனர். மாணவிகள் கல்லூரியில் இருந்து வரும் பொழுது, லாலாபேட்டையை சேர்ந்த அஜீத், சரண் ஆகிய 2 வாலிபர்கள் மாணவிகளை கிண்டல் செய்துள்ளனர்.

இது குறித்து மாணவிகள் தங்களது பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து மாணவிகளின் தந்தை சுந்தரேசன், வாலிபர்களை தட்டிக்கேட்டுள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த வாலிபர்கள் சுந்தரேசனை கத்தியால் தாக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். காயம் அடைந்த சுந்தரேசன் வேலூரில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

சிகிச்சை பலனின்றி சாவு

இது குறித்து மாணவிகளின் தாயார் வள்ளி அளித்த புகாரின் பேரில் சிப்காட் போலீசார் வழக்குப் பதிவு செய்து 2 வாலிபர்களையும் தேடி வந்தனர். இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுந்தரேசன் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்துவிட்டார்.

மாணவிகளை கிண்டல் செய்ததை தட்டிக் கேட்ட தந்தை கத்தியால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.


Next Story