பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைவு
பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைவாக இருப்பதாக கலெக்டர் தெரிவித்தார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப்பணிகள் திட்டம் சார்பில் உலக தாய்ப்பால் வார விழா மற்றும் பெண் குழந்தையை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் விழிப்புணர்வு நிகழ்ச்சி தச்சூரில் உள்ள பாரதி கல்வி நிறுவனத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமை தாங்கினார். ஒருங்கிணைந்த குழந்கைள் வளர்ச்சி பணிகள் (திட்ட அலுவலர்) செல்வி, மாவட்ட சமூக நல அலுவலர் தீபிகா, துணை இயக்குனர்
சுகாதார பணிகள் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் கலெக்டர் ஷ்ரவன்குமார் பேசியதாவது:-
பிறப்பு விகிதம் குறைவு
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் குழந்தை பிறப்பு விகிதம் 1000 ஆண்குழந்தைகளுக்கு 911 பெண் குழந்தைகளாக உள்ளது. 950 பெண் குழந்தைகளுக்கு மேல் பிறப்பு விகிதம் இருந்தால் ஆரோக்கியமான சமுதாயம் உருவாகும். எனவே பெண் குழந்தைகள் பிறப்பு விகிதத்தினை உயர்த்திட அனைவரும் உறுதுணையாகஇருக்க வேண்டும். 18 வயதிற்கு கீழ் ஒரு பெண்ணிற்கு குழந்தைபெறுவதற்கான உடல் வலிமை இருக்காது. எனவே சிறுமிக்கு திருமணம் செய்துவைப்பதால் எதிர்கால தலைமுறை குழந்தைகளுக்கு பல்வேறு குறைகள் ஏற்படுகிறது.
ஊட்டச்சத்து குறைபாடு
பெண்கள் கருவுற்ற காலங்களில் முறையான சரிவிகித உணவு உட்கொள்ள வேண்டும். இல்லையெனில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படும். எனவே பெண்கள் அனைவரும் பழங்கள், சிறுதானியங்கள் உள்ளிட்ட ஊட்டச்சத்துள்ள உணவு பொருட்களை உட்கொள்ள வேண்டும்.
தாய்ப்பால் என்பது சுத்தமான எவ்வித வேதிபொருட்களும் கலக்காத சத்தான உணவு பொருளாகும். ஆரோக்கியமான தாய்ப்பால் குழந்தைக்கு வழங்கிட ஊட்டச்சத்துகள் அடங்கிய உணவு பொருட்களை தாய்மார்கள் உட்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் 2 பெண் குழந்தைகள் பெற்று கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொண்ட பெற்றோர்களுக்கு பரிசுப் பொருட்கள், சிறந்த அங்கன்வாடி பணியாளர் மற்றும் உதவியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசுத் தொகை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கல்லூரி பேராசியர்கள், மாணவிகள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.