களைகட்டி வரும் பொங்கல் பண்டிகை
தமிழர்களின் திருநாளாம் பொங்கல் திருவிழா வருகிற 15-ந் தேதி கொண்டாடப்படுகிறது.
பொங்கல் பரிசு
ஆடி மாதத்தில் தேடி விதைத்த பயிர்களின் விளைச்சலை அறுவடை செய்து பயன் அடையும் பருவமே தை மாதம் ஆகும். அந்த அறுவடையில் கிடைத்த நெல்லின் புத்தரிசியை வெல்லம், பால், நெய் சேர்த்துப் புதுப்பானையிலிட்டு புத்தடுப்பில் கொதிக்க வைத்து பொங்கல் சோறாக்கிக் சூரியனுக்கும் கால்நடைகளுக்கும் படைத்து உண்டு மகிழும் விழாவே பொங்கல் விழாவாகும். அதனை கொண்டாட தமிழ்நாடு தயாராகிவிட்டது.
அரசு தரப்பில் ரூ.1000 பரிசும், கரும்புடன் ரேஷன் கடைகளில் பொங்கல் தொகுப்பும் வழங்கப்பட்டு வருகிறது. எங்கும் பச்சரிசி, வெல்லம், கரும்பு, மண் பானைகள், கலர் கோலப்பொடி, புத்தாடைகள் விற்பனை களைகட்டி வருகிறது. அரியலூர்-பெரம்பலூர் மாவட்டங்களில் மண்பானைகள் விற்பனை மும்முரமாக நடக்கிறது. களைகட்டி வரும் பொங்கல் பண்டிகை குறித்து பொதுமக்கள் தெரிவித்த கருத்துகள் விவரம் வருமாறு:-
கலாசாரத்தை இழந்து வருகிறோம்
அரியலூரை சேர்ந்த இல்லத்தரசி செல்வராணி:-
பொங்கல் பண்டிகை என்பது நமது கலாசாரமும், இயற்கையும் சார்ந்த ஒரு பண்டிகை. நம் வாழ்வாதாரமாக விளங்கும் இயற்கை, விவசாயம், கால்நடைகளை போற்றும் விதமாக கொண்டாடப்படுகிறது. அதேபோல் நமது முன்னோர்கள் மண்பானையில் பொங்கல் வைத்து கொண்டாடினர். தற்போது முன்பு போல் மண்பானையில் பொங்கல் வைப்பது கிடையாது. மேலும், கூட்டுக்குடும்ப வாழ்க்கை முறை என்ற ஒரு சிறப்பை நாம் இழந்துவிட்டோம். 4 நாட்கள் கொண்டாடப்படும் பொங்கல் விழா தற்போது விடுமுறை நாட்களாகவே நாம் கொண்டாடி வருவது நமது பாரம்பரியத்தையும், கலாசாரத்தையும் இழந்து வருவதாகவே கருதுகிறேன். இதையும் தாண்டி ஒரு சில இடங்களில் மரபு மாறாமல் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது மகிழ்ச்சியாக உள்ளது.
குடும்ப ஒற்றுமை
விக்கிரமங்கலத்தை சேர்ந்த கல்லூரி மாணவி புவனேஸ்வரி:- தமிழர்களின் பாரம்பரிய பண்டிகைகளில் மிக முக்கியமானது பொங்கல். இது நமது கலாசாரம், பண்பாடு, பழக்கங்களை எடுத்துச் சொல்லும் பண்டிகையாக உள்ளது. போகி பண்டிகை, பொங்கல், மாட்டுப்பொங்கல், கரிநாள் என தமிழர்களின் குடும்ப ஒற்றுமை, அவர்கள் செய்த விவசாயம், விவசாயத்திற்கு பயன்படும் மாடுகளுக்கு விழா போன்றவைகளை நினைக்கும் பொழுது தமிழர்கள் தங்களது வாழ்வில் மனிதர்களுக்கு மட்டுமல்ல விலங்குகளையும் மதித்தார்கள் என்பதை பார்க்க முடிகிறது. தற்போது நவீன உலகில் பொங்கல் பண்டிகை கொண்டாடும் பொழுது நகர வாழ்க்கையில் பல மாற்றங்கள் வந்தாலும் இன்றும் கிராமப்புறங்களில் பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. எனவே நகர மக்கள் கிராமங்களுக்கு சென்று குடும்பத்துடன் ஒற்றுமையாக உறவினர்களுடன் பொங்கல் விழாவை கொண்டாடினால் இன்னும் சிறப்பு பெரும்.
மக்கள் ஆர்வம் காட்டுவதில்லை
அரியலூர் மாவட்டம் சோழமாதேவியை சேர்ந்த மண்பாண்ட தொழிலாளி சகுந்தலா:- மிகுந்த இடர்பாடுகளுக்கு இடையில் மண்பாண்டங்களை தயார் செய்தாலும் பொங்கலிடுவதற்கு மண் பானைகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்டுவதில்லை. சமையல் எரிவாயு அடுப்புகள் அதிகளவு பயன்பாட்டிற்கு வந்த பிறகு பாரம்பரிய முறைப்படி பொங்கல் பண்டிகை கொண்டாடுவதை மக்கள் மறந்து விட்டனர். உலோக பாத்திரங்களை பயன்படுத்தி பொங்கல் பண்டிகையை கொண்டாடுகின்றனர். இதனால் மண்பானையில் பொங்கலிட்டு ஆரோக்கியமான பொங்கலாக கொண்டாடுவதை மக்கள் மறந்து விட்டனர். எனவே மீண்டும் விறகு அடுப்பில் சமைத்து மண்பாண்டங்களில் உணவுகளை தயார் செய்து உண்ணும் பழக்கத்திற்கு மக்கள் வரும்போது அனைத்து தரப்பு மக்களும் ஆரோக்கியமாக இருப்பார்கள்.
விறகு அடுப்பில்...
மதனத்தூரை சேர்ந்த பிளஸ்-2 மாணவி ஜெயசூர்யா:- கிராமங்களில் பொங்கல் திருவிழா சிறப்பாக கொண்டாடுவது வழக்கம். கிராம மக்கள் இன்னும் பாரம்பரிய பண்டிகைகளை தொடர்ந்து கொண்டாடி வருகிறார்கள். அந்த வகையில் மண்பாண்டங்களில் பொங்கல் செய்து வழிபடுவது மற்றும் அதனை உண்பது மிகவும் சிறப்பானது. சாதாரணமாகவே விறகு அடுப்பில் மண்பாண்டங்களை கொண்டு சமைக்கும் உணவுகள் உலோக பாத்திரங்களில் சமைக்கும் உணவை விட ருசியாக இருக்கும். வயதானவர்கள் மண்பாண்டங்களில் சமைத்த உணவை சாப்பிடுவது குறித்து சொல்லும் பொழுது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என்று சொல்கின்றனர். ஆனால் இப்போதெல்லாம் உலோக பாத்திரங்களில் பொங்கல் செய்து பண்டிகை கொண்டாடுகிறார்கள். நம்மை நம்பி மண்பாண்டங்களை தயார் செய்து விற்பனை செய்யும் தொழிலாளிகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் மண்பாண்டங்களை வாங்கி அதில் பொங்கல் இட்டு நாமும் மகிழ்ந்து அவர்களையும் மகிழ வைப்போம்.
அறுவடை பண்டிகை
உடையார்பாளையத்தை சேர்ந்த அபிராமி:-
பொங்கல் பண்டிகை என்பது ஓர் அறுவடை பண்டிகையாகும். இந்த நன்னாளில் உழைக்கும் மக்கள் இயற்கை தெய்வமாக கருதப்படும் சூரியனுக்கும், கால்நடைகளுக்கும் நன்றி கூறும் தினமாக கொண்டாடப்படுகிறது. இளைய சமுதாயத்தினர் பண்பாட்டுக்கும், கலாசாரத்திற்கும் உரிய மரியாதை அளிப்பதில்லை. எனவே பண்டிகையின் முக்கியத்துவம் குறித்து பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு எடுத்துக் கூறி வரும் காலங்களில் கலாசாரத்தை பறைசாற்றும் பண்டிகைகளை வெகு விமரிசையாக கொண்டாட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.