மர்ம ஆசாமியின் கைரேகை சிக்கியது
அரசு ஊழியர் வீட்டில் நகை திருடப்பட்டதில் மர்ம ஆசாமியின் கைரேகை சிக்கியுள்ளது.
மேலகிருஷ்ணன்புதூர்:
அரசு ஊழியர் வீட்டில் நகை திருடப்பட்டதில் மர்ம ஆசாமியின் கைரேகை சிக்கியுள்ளது.
கைேரகை சிக்கியது
நாகர்கோவில் அருகே உள்ள குளத்தூரை சேர்ந்தவர் வள்ளிவேல் (வயது52). இவர் கோட்டார் ஆயுர்வேத மருத்துவ கல்லூரி வளாகத்தில் உள்ள மாவட்ட குடும்ப நல செயலகத்தில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் காலையில் வள்ளிவேல் வழக்கம் போல் வேலைக்கு சென்றார். மனைவியும் பிள்ளைகளும் வீட்டைப் பூட்டிவிட்டு ராஜாக்கமங்கலத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றனர். வள்ளிவேல் மதியம் வீட்டிற்கு வந்த போது பின்பக்கம் ஜன்னல் உடைக்கப்பட்டு இருந்தது. மேலும், படுக்கை அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 11 பவுன் நகைகள் திருடப்பட்டு இருந்தது.
வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட யாரோ மர்ம நபர்கள் ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்து நகைகளை திருடி சென்றுள்ளனர்.
தனிப்படை
இதுகுறித்து வள்ளிவேல் சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு கைரேகை பதிவு செய்யப்பட்டது. அதில் ஒரு மர்ம நபரின் கைரேகை சிக்கியுள்ளது. அந்த கைரேகையை வைத்து போலீசார் இதற்கு முன்னால் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட திருடர்களின் கைரேகையுடன் ஒப்பிட்டு பார்த்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், மர்ம நபர்களை பிடிக்க 2 தனி படைகள் அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.