கோவில் விழாவுக்கு வைத்திருந்த பட்டாசுகள் வெடித்து சிதறியது
ராசிபுரத்தில் கோவில் விழாவுக்கு வைத்திருந்த பட்டாசுகள் வெடித்து சிதறியதால் விற்பனையாளர் படுகாயம் அடைந்தார்.
ராசிபுரம்
பட்டாசுகள் வெடித்தது
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் டவுன் வி நகரில் வசிப்பவர் கந்தசாமி மகன் கண்ணன் (வயது 45). இவரது மனைவி சுபித்ரா (40), இவர்களுக்கு அஸ்வர்த்தினி (17), அணிஷ்கா (10) என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் கண்ணன் கோவில் திருவிழாக்களுக்கு தேவையான வெடிக்கும் வண்ண வெடிகள் போன்றவற்றை தயாரித்து விற்பனை செய்து வருகிறார். இவர் ராசிபுரம் தட்டான் குட்டை ஏரி அருகில் உள்ள முனியப்பன் கோவில் பகுதி, பட்டணம் ரோடு பகுதியில் உரிமத்துடன் பட்டாசு குடோன் வைத்துள்ளார்.
இந்தநிலையில் கண்ணன் குடியிருக்கும் வீட்டில் கோவில் திருவிழாவிற்கு கொடுப்பதற்காக பட்டாசுகளை வைத்திருந்தார். நேற்று இரவு கண்ணன் வீட்டில் கொசு மேட்டை அடித்துள்ளார். அப்போது பயங்கர சத்தத்துடன் வீட்டில் வைக்கப்பட்டு இருந்த பட்டாசுகள் வெடித்து சிதறியது. தகவல் அறிந்து அங்கு வந்த ராசிபுரம் தீயணைப்பு படையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இதில் பலத்த தீக்காயம் அடைந்த கண்ணனை அக்கம்பக்கத்தினர் மீட்டு ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் வீட்டுக்குள் இருந்த அவரது மனைவி மகள் எந்தவித காயமும் இன்றி உயிர் தப்பினர்.
கலெக்டர் பார்வையிட்டார்
சம்பவ இடத்திற்கு ராசிபுரம் தாசில்தார் சரவணன், போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகவனம், சப்-இன்ஸ்பெக்டர் தங்கம் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் கலெக்டர் உமா சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வரும் கண்ணனை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
அப்போது ராசிபுரம் டிஎஸ்பி (பொறுப்பு) முத்துக்கிருஷ்ணன் உடன் இருந்தார். இந்த சம்பவம் ராசிபுரத்தில் பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியது. வெடி விபத்து காரணமாக ஒரு மணி நேரத்திற்கு மேலாக மின்சாரம் நிறுத்தப்பட்டது.