முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும்
கள்ளக்குறிச்சிக்கு வருகை தரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும் என தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கள்ளக்குறிச்சி,
நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கள்ளக்குறிச்சிக்கு வருகிற 22-ந்தேதி வருகை தரவுள்ளார். இதையொட்டி முதல்-அமைச்சருக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது குறித்து கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. கட்சி அலுவலகத்தில் மாவட்ட செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதற்கு தெற்கு மாவட்ட பொறுப்பாளர் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ தலைமை தாங்கினார். வடக்கு மாவட்ட பொறுப்பாளர் உதயசூரியன் எம்.எல்.ஏ., மாநில மகளிரணி துணை செயலாளர் அங்கயற்கண்ணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மணிக்கண்ணன் எம்.எல்.ஏ. வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில், வருகிற 22-ந் தேதி கள்ளக்குறிச்சிக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கவும், புதிய வளர்ச்சி திட்ட பணிகளை அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கவும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தரவுள்ளார்.
நலத்திட்ட உதவிகள்
விழாவில் 20 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த விழாவிற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவண்ணாலை மாவட்டத்தில் இருந்து மணலூர்பேட்டை, மாடாம்பூண்டி கூட்டுரோடு, தியாகதுருகம் வழியாக கள்ளக்குறிச்சி அருகே உலகங்காத்தான் கைகாட்டியில் நடைபெறும் விழாவிற்கு வருகை தருகிறார்.
எனவே அவருக்கு மணலூர்பேட்டை, மாடாம்பூண்டி கூட்டுரோடு, வடதொரசலூர், தியாகதுருகம், மாடூர் சுங்கச்சாவடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் தமிழர் கலாசார முறைப்படி உற்சாக வரவேற்பு அளிக்கவேண்டும். சுவர் விளம்பரம் செய்ய வேண்டும். டிஜிட்டல் பேனர்கள் வைக்கக்கூடாது. மேலும் தி.மு.க.வில் உட்கட்சி தேர்தல் நடைபெறவுள்ளது.
மரக்கன்றுகள்
இந்த தேர்தலில் பல்வேறு போட்டிகள் இருக்கக்கூடும். எனவே அனைவரும் ஒற்றுமையாக பிரச்சினை இல்லாமல் செயல்பட வேண்டும் என்றார். தொடர்ந்து கட்சி நிர்வாகிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கினார். கூட்டத்தில் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் புவனேஸ்வரி பெருமாள், ஒன்றியக்குழு தலைவர் அலமேலு ஆறுமுகம், மாநில பொதுக்குழு உறுப்பினர் முருகன், தெற்கு மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் ராமமூர்த்தி, காமராஜ் மடம்.பெருமாள், சண்முகம், வடக்கு மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் வாணியந்தல் ஆறுமுகம், நகர செயலாளர் சுப்புராயலு, ஒன்றிய செயலாளர்கள் வெங்கடாசலம், சத்தியமூர்த்தி, அன்புமணிமாறன் உள்பட ஒன்றிய செயலாளர்கள, நகர செயலாளர்கள் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள், ஒன்றியக்குழு தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.