முதல் கட்டமாக 3 வார்டுகளில் பகுதி சபை கூட்டம்
வால்பாறையில் முதல் கட்டமாக 3 வார்டுகளில் பகுதி சபை கூட்டம் நடைபெறும் என்று நகராட்சி கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.
வால்பாறை
வால்பாறையில் முதல் கட்டமாக 3 வார்டுகளில் பகுதி சபை கூட்டம் நடைபெறும் என்று நகராட்சி கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.
நகராட்சி கூட்டம்
வால்பாறையில் நகராட்சி மன்ற கூட்டம் தலைவர் அழகுசுந்தரவள்ளி தலைமையிலும், துணை தலைவர் செந்தில்குமார், மேலாளர் சலாவுதீன், நகராட்சி பொறியாளர் வெங்கடாசலம் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது. கூட்டம் தொடங்கியதும் மேலாளர் சலாவுதீன் இன்று(செவ்வாய்க்கிழமை) தமிழக முதல்-அமைச்சரின் சிறப்பு திட்டத்தின் பகுதி சபை கூட்டம், வார்டு குழு கூட்டம் நடைபெறுவது குறித்தும், அதன் செயல்பாடுகள் குறித்தும் கவுன்சிலர்களுக்கு விளக்கினார். மேலும் முதல் கட்டமாக 4, 10, 14-வது வார்டுகளில் குழு கூட்டம், பகுதி சபை கூட்டம் நடத்தப்படும் என்றார். மேலும் கருணாநிதி, அம்பேத்கர் ஆகியோருக்கு சிலை அமைப்பது தொடர்பாக அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
வாகன நிறுத்துமிடம்
அதன்பின்னர் நகராட்சி மார்க்கெட் கடைகளுக்கு வாடகை நிர்ணயம் செய்வது, மார்க்கெட் சுங்க வசூலை அமல்படுத்துவது, அண்ணா பூங்கா பராமரிப்பு பணிைய உடனே தொடங்குவது, படகு இல்லத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வருவது, நகரில் வாகன நிறுத்துமிடம் அமைப்பது, வெள்ளமலை சாலையை சீரமைப்பது, சத்துணவு பணியாளர்களுக்கு சர்வீஸ் புக் தொடங்குவது, தெருவிளக்கு அமைக்க போடப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்வது போன்ற கோரிக்கைகளை துணைத்தலைவர் செந்தில்குமார் வலியுறுத்தினார்.
ஆர்ப்பாட்டம் நடத்துவேன்
இதையடுத்து முடீஸ் பகுதியில் சாலை சீரமைப்பு பணியை தொடங்க தாமதப்படுத்தினால் நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவேன், ஏ.டி.எம். மையம் அமைக்க வேண்டும், நகராட்சி நிதிநிலையை அறிவிக்க வேண்டும் என்று 17-வது வார்டு கவுன்சிலர் மணிகண்டன் கூறினார்.
இது தவிர 15-வது வார்டில் உடனடியாக தெருவிளக்கு வசதி அமைத்து தர வேண்டும் என்று கவுன்சிலர் ரவிச்சந்திரன் கோரிக்கை விடுத்தார். மேலும் சோலையாறு நகர் இடதுகரை சேடல்டேம் பகுதியில் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க 8-வது வார்டு கவுன்சிலர் இந்துமதி வலியுறுத்தினார்.
கூட்டத்தில் கலந்துகொண்ட பெரும்பாலான கவுன்சிலர்கள் உடனடியாக தெருவிளக்கு பிரச்சினையை சரி செய்யவும், தூய்மை பணிகளை விரைவுபடுத்தவும் கோரிக்கை விடுத்தனர்.
பின்னர் தெருவிளக்கு ஒப்பந்தத்தை ரத்து செய்வது, 21 வார்டுகளிலும் வார்டு குழு மற்றும் பகுதி சபை கூட்டம் நடத்துவது, சாலை சீரமைப்பு, பள்ளி மேற்கூரை பராமரிப்பு, பள்ளி சுற்றுச்சுவர் அமைப்பது, மயான கூரை பராமரிப்பு, தாவரவியல் பூங்கா மற்றும் படகு இல்ல பராமரிப்புக்கு 20 பேரை நியமிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.