மீன்களின் இனப்பெருக்கத்திற்காகமீன்பிடி தடைக்காலம் நாளை மறுநாள் முதல் அமல்

கடலில் மீன்களின் இனப்பெருக்கத்திற்காக மீன்பிடி தடைக்காலம் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.
கடலூர் முதுநகர்,
மீன்கள் இனப்பெருக்கம்
தமிழகத்தில் கிழக்கு மற்றும் மேற்கு கடல் பகுதியில் மீன்கள் இனப்பெருக்க காலமாக குறிப்பிட்ட நாட்கள் கருதப்படுகிறது. இந்த காலக்கட்டத்தில் கடலில் யாரும் மீன்பிடிக்க செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள். இந்த நாட்கள் மீன்பிடி தடை காலமாக நடைமுறையில் உள்ளது. மீன் வளத்தை பெருக்கவும், பாதுகாத்திடும் வகையில் தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குப்படுத்தும் சட்டத்தின் படி தடைக்காலம் அறிவிக்கப்படும்.
அதன்படி இந்த ஆண்டில் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) முதல் ஜூன் மாதம் 14-ந் தேதி வரை 61 நாட்கள் மீன் பிடி தடை காலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி தமிழகத்தில் கிழக்கு கடலோர பகுதியில் திருவள்ளூர் முதல் கன்னியாகுமரி வரை இந்த தடை காலம் அமலில் இருக்கும்.
மீன்பிடி தடைக்காலம்
இந்த நாட்களில் விசைப்படகுகள் மற்றும் இழுவை படகுகள் மூலம் மீன் பிடிக்க மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் கடலூர் மாவட்டத்தில் தேவனாம்பட்டினம், தாழங்குடா, கடலூர் துறைமுகம், அன்னங்கோவில் மீன்படி தளம் உள்ளிட்ட பகுதியில் இருந்து மீனவர்கள் தினசரி கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்தாண்டுக்கான மீன்பிடி தடைக்காலம் தொடங்க உள்ளதால், மேற்கண்ட காலத்தில் மீனவர்கள் மீன் பிடி தொழில் செய்ய வேண்டாம். மேலும் வருகிற 14-ந்தேதி இரவு 12 மணிக்குள் அனைத்து விசை மற்றும் இழுவலை படகுகள் கரைக்குத் திரும்ப வேண்டும்.
இதனை பின்பற்றாத படகுகள் மீது தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குபடுத்தும் சட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கடலூர் துறைமுகம் பைபர் படகு மற்றும் நாட்டு படகு மீனவர்கள் 5 நாட்டிகல் மைலுக்குள் கடலுக்கு சென்று மீன் பிடிக்கலாம். ஆனால் சென்னை அருகே உள்ள ஆந்திர எல்லைப் பகுதியில் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேற்கண்ட தகவல் கடலூர் மீன்வளத்துறை உதவி இயக்குனர் சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.






