தக்கலையில் மீன் வியாபாரி பலி; நண்பர் படுகாயம்


தக்கலையில் மீன் வியாபாரி பலி; நண்பர் படுகாயம்
x
தினத்தந்தி 28 April 2023 7:15 PM GMT (Updated: 28 April 2023 7:15 PM GMT)

தக்கலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் மீன் வியாபாரி பரிதாபமாக இறந்தார். நண்பர் படுகாயம் அடைந்தார்.

கன்னியாகுமரி

தக்கலை:

தக்கலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் மீன் வியாபாரி பரிதாபமாக இறந்தார். நண்பர் படுகாயம் அடைந்தார்.

மீன் வியாபாரி சாவு

தக்கலை அருகே உள்ள திருவிதாங்கோடு ஆர்.சி.தெருவை சேர்ந்தவர் சகாயராஜ். இவருடைய மகன் அபிமோன் (வயது 28). இவர் திருவிதாங்கோடு சந்தையில் மீன் வியாபாரம் செய்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு 10.15 மணி அளவில் அபிமோன் மோட்டார் சைக்கிளில் இரணியல் சாலையில் தக்கலை நோக்கி வந்து கொண்டிருந்தார். பின் இருக்கையில் அவருடைய நண்பர் கோட்டவிளை தோப்பு பகுதியை சேர்ந்த மெர்சின் ஜெசோ (21) என்பவர் அமர்ந்து இருந்தார். தக்கலை கோர்ட்டு பகுதியில் மோட்டார் சைக்கிள் வரும் போது, கோர்ட்டின் முன்புறம் சாலையில் இருட்டான பகுதியில் நின்று கொண்டிருந்த லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதனால் தூக்கிவீசப்பட்ட அபிமோன் சம்பவ இடத்திலேயே மண்டை உடைந்து பரிதாபமாக பலியானார்.

போலீஸ் விசாரணை

அவருடைய நண்பர் மெர்சின் ஜெசோவிற்கு தலையில் படுகாயம் ஏற்பட்டது, அந்த பகுதியில் இருந்தவர்கள் அவரை மீட்டு சுங்கான்கடை அருகில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும், தக்கலை போலீஸ் இன்ஸ்பெக்டர் நெப்போலியன், சப் -இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பலியான அபிமோன் உடலை மீட்டு பிேரத பரிசோதனைக்காக தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர், மேலும் சாலையில் லாரியை அஜாக்கிரதையாக நிறுத்திவைத்திருந்த நாமக்கல் மாவட்டம் வள்ளிபுரம் பகுதியை சேர்ந்த சதீஸ்குமார் (42) என்பவர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்தில் பலியான அபிமோனுக்கு குமாரி (26) என்ற மனைவியும் 4 வயதில் ஆரிக் என்ற மகனும் உள்ளனர்.


Next Story