வெள்ளநீர் கால்வாய் திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும்; சபாநாயகரிடம் வியாபாரிகள், விவசாயிகள் கோரிக்கை


வெள்ளநீர் கால்வாய் திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும்; சபாநாயகரிடம் வியாபாரிகள், விவசாயிகள் கோரிக்கை
x

வெள்ளநீர் கால்வாய் திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும் என சபாநாயகரிடம் வியாபாரிகள், விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

திருநெல்வேலி

திசையன்விளை:

வெள்ளநீர் கால்வாய் திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும் என சபாநாயகரிடம் வியாபாரிகள், விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

கலந்தாய்வு கூட்டம்

திசையன்விளை பயணிகள் விடுதியில் திசையன்விளை சுற்றுவட்டார விவசாயிகள், அனைத்து வியாபாரிகள் சங்க பேரமைப்பு நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. இதில் கலந்துகொண்டவர்கள் தாமிரபரணி வெள்ளநீர் கால்வாய் திட்டத்தை மழை காலத்திற்குள் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கும்படி சபாநாயகர் அப்பாவுவிடம் கோரிக்கை மனு கொடுத்து வலியுறுத்தி பேசினர்.

அதை தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு கூறுகையில், 'ஆண்டுதோறும் தாமிரபரணி ஆற்றில் மழை காலங்களில் வீணாக கடலுக்கு செல்லும் தண்ணீரை வறண்ட பகுதிகளான திசையன்விளை, சாத்தான்குளம் தாலுகா பகுதிகளுக்கு கொண்டு செல்லும் வகையில் தாமிரபரணி, நம்பியாறு, கருமேனியாறு இணைப்பு வெள்ளநீர் கால்வாய் திட்டம் 2009-ம் ஆண்டு அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதியால் தொடங்கப்பட்டது. 2011-ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டபின்பு இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது.

தற்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு கவனம் செலுத்தி இந்த பணிகளை விரைவுபடுத்த தேவையான நிதியை ஒதுக்கினார். இதனால் 60 முதல் 90 சதவீதம் பணிகள் முடிவடைந்து உள்ளது. தடையாக இருந்த ரெயில்வே பாலத்தை கட்ட ரூ.18 கோடி கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து கட்டிமுடிக்கப்பட்டுள்ளது. தேவையான இடங்களில் பாலம் கட்டும் பணியும் நடந்து வருகிறது. கருணாநிதியின் கனவு திட்டமான இத்திட்டம் நிறைவேற்றப்பட்டு வரும் மழைகாலத்தில் வெள்ளநீர் கால்வாயில் தண்ணீர் வரும்' என்றார்.

மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ், அனைத்து வியாபாரிகள் சங்க பேரமைப்பு திசையன்விளை தலைவர் சாந்தகுமார் மற்றும் வியாபாரிகள், விவசாயிகள் உடன் இருந்தனர்.

திறப்பு விழா

திசையன்விளை அருகே குமாரபுரம் பஞ்சாயத்து குமாரபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ரூ.29 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறை கட்டிடம், அந்தோணியார்புரத்தில் தரைமட்ட நீர்தேக்க தொட்டி, உபகாரமாதாபுரத்தில் சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மைய கட்டிடம் ஆகியவற்றை சபாநாயகர் அப்பாவு திறந்து வைத்தார்.

தொடர்ந்து குமாரபுரம், சுவிஷேசபுரத்தில் பேவர்பிளாக் சாலை, உறுமன்குளம் பஞ்சாயத்து புலிக்குளம் இந்திரா நகர், தேவர் தெரு, பெட்டைக்குளம் காலனி தெரு, ஊராட்சி ஒன்றிய பெண்கள் தொடக்கப்பள்ளி சாலை, அங்கன்வாடி தெரு பகுதிகளில் பேவர்பிளாக் சாலை அமைக்கும் பணி, உறுமன்குளத்தில் இருந்து தோப்புவிளை வழியாக ஆத்தங்கரை பள்ளிவாசல் வரை ரூ.3½ கோடியில் தார்சாலை அமைக்கும் பணிகளுக்கு சபாநாயகர் அப்பாவு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். மேலும் பெருங்குளத்தில் ரூ.29 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறை கட்டிடத்தையும் திறந்து வைத்தார்.

விழாவில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ், குமாரபுரம் பஞ்சாயத்து தலைவர் அனிதா பிரின்ஸ், உறுமன்குளம் பஞ்சாயத்து தலைவர் வைகுண்டம் பொன் இசக்கி, குமாரபுரம் பஞ்சாயத்து துணைத்தலைவர் ஆனிஷா பயாஸ், வட்டார வளர்ச்சி அலுவலர் பிளாரன்ஸ், ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜோசப் பெல்சி உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story