மேகமலை அருவியில் நீர்வரத்து குறைந்தது


மேகமலை அருவியில் நீர்வரத்து குறைந்தது
x
தினத்தந்தி 25 Jun 2023 7:15 PM GMT (Updated: 26 Jun 2023 12:11 PM GMT)

கோம்பைத்தொழு அருகே உள்ள மேகமலை அருவியில் நீர்வரத்து குறைந்தது. இதனால் குளிக்க முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்

தேனி

நீர்வரத்து குறைவு

கடமலை-மயிலை ஒன்றியம் கோம்பைத்தொழு அருகே மேகமலை அருவி அமைந்துள்ளது. ஆண்டின் பெரும்பாலான மாதங்கள் இந்த அருவியில் நீர்வரத்து காணப்படும். நீர்வரத்து உள்ள நாட்களில் அருவியில் குளிப்பதற்காக திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம்.

விடுமுறை நாட்களில் அருவியில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்படும். மேகமலை வனப்பகுதியில் கடந்த சில மாதங்களாக போதிய அளவில் மழை இல்லை. அதன் காரணமாக அருவியில் நீர்வரத்து தொடர்ந்து குறைந்து கொண்டே வந்தது.

சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக அருவியில் மிக குறைந்த அளவில் தண்ணீர் விழுகிறது. நேற்று விடுமுறை தினம் என்பதால் அருவிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர். நீர்வரத்து குறைந்ததால், ஒரே நேரத்தில் அனைத்து சுற்றுலா பயணிகளும் குளிக்க முடியவில்லை. இதனால் சுற்றுலா பயணிகள் சிலர் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

இன்னும் சிலர் அருவியின் கீழ்ப்பகுதியில் குளம் போல தேங்கியிருந்த நீரில் குளித்துவிட்டு சென்றனர். தொடர்ந்து மேகமலை வனப்பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் அடுத்த சில நாட்களில் அருவியில் நீர்வரத்து முற்றிலுமாக நின்று விடும் நிலை ஏற்ப்பட்டுள்ளது.

தற்காலிக தடை

இதற்கிடையே அருவியில் மிகக் குறைந்த அளவிலான தண்ணீர் மட்டுமே வருவதால் சுற்றுலா பயணிகளில் சிலர் அருவியின் மேல் பகுதியில் கிராமங்களுக்கு குடிநீர் எடுத்து செல்வதற்காக அமைக்கப்பட்டுள்ள குடிநீர் தொட்டியில் இறங்கி குளித்து வருகின்றனர்.

இதனால் குடிநீர் மாசடைந்து வருகிறது. இதனை தடுக்கும் வகையில் வனத்துறையினர் அவ்வப்போது அருவி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும். மேலும் நீர்வரத்து ஏற்படும் வரை சுற்றுலா பயணிகளுக்கு தற்காலிக தடை விதிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story