ஆறுகளில் தண்ணீர் வரத்து குறைந்தது


ஆறுகளில் தண்ணீர் வரத்து குறைந்தது
x
தினத்தந்தி 10 Oct 2022 12:15 AM IST (Updated: 10 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

வால்பாறையில் மழை பெய்யாததால் ஆறுகளில் தண்ணீர் வரத்து குறைந்தது.

கோயம்புத்தூர்

வால்பாறை,

வால்பாறையில் மழை பெய்யாததால் ஆறுகளில் தண்ணீர் வரத்து குறைந்தது.

சுற்றுலா பயணிகள்

மலைப்பகுதியான வால்பாறையில் கடந்த ஜூன் மாதம் முதல் தென்மேற்கு பருவமழை பெய்ய தொடங்கியது. தொடர்ந்து தீவிரமாக பெய்து வந்தது. செப்டம்பர் மாதம் 2-வது வாரத்தில் மழை நின்று விட்டது. இதனை தொடர்ந்து வால்பாறை பகுதியில் இரவில் குளிரும், பனிமூட்டமும் நிலவி வந்தது. மேலும் பகலில் வெயில் அடித்து வருகிறது. வால்பாறையில் மாறுபட்ட காலநிலை நிலவி வருகிறது.

இந்தநிலையில் கடந்த ஒரு வாரமாக காலாண்டு விடுமுறை மற்றும் தொடர் விடுமுறையையொட்டி வால்பாறை பகுதிக்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் கூழாங்கல் ஆற்றில் குளித்து மகிழ்ந்தனர். இதே போல் கருமலை ஆற்றிலும் தண்ணீர் குறைந்து விட்ட நிலையில், சுற்றுலா பயணிகள் குறைந்தளவே உள்ள தண்ணீரில் விளையாடி சென்றனர்.

தண்ணீர் வரத்து

இதற்கிடையே நேற்று முன்தினம் இரவு முதல் ஒரு சில எஸ்டேட் பகுதிகளில் லேசான மழை பெய்தது. மேலும் சில பகுதிகளில் கனமழை பெய்தது. ஆனால், வால்பாறை நகரில் மழை பெய்யவில்லை. இதனால் வால்பாறை நகரையொட்டி உள்ள முக்கிய சுற்றுலா தலமான கூழாங்கல் ஆற்றில் தண்ணீர் வரத்து குறைந்து உள்ளது. இதனால் பாறைகள் தெரிவதோடு, பள்ளங்களில் மட்டும் தண்ணீர் நிரம்பி குட்டை போல் காட்சியளித்து வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைகின்றனர்.

இந்தநிலையில் வால்பாறை பகுதியில் நேற்று வானம் மப்பும், மந்தாரமுமாக இருந்தது. பின்னர் மதியம் 2 மணிக்கு மழை பெய்ய தொடங்கியது. தொடர்ந்து மாலை 3.30 மணி வரை கனமழை பெய்தது. இதனால் வால்பாறை பகுதியில் வெயிலின் தாக்கம் சற்று குறைந்தது. தொடர்ந்து மழை பெய்தால், ஆறுகளில் தண்ணீர் வரத்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் வடகிழக்கு பருவமழை வால்பாறை பகுதியில் பெய்வதற்கான காலசூழ்நிலை உருவாகி உள்ளது.


Next Story