கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்
கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
கோவை கலெக்டர் அலுவலகத்தில் கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் ஜி.என்.மில் மற்றும் பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கட்டப்பட்டு வரும் மேம்பால பணிகளை துரிதப்படுத்துவது குறித்து அனைத்து துறைகளின் ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் சமீரன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ், தேசிய நெடுஞ்சாலை கோட்டப்பொறியாளர் ரமேஷ், உதவி கோட்டப்பொறியாளர் முரளிகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கலெக்டர் சமீரன் கூறியதாவது:-
பெரியநாயக்கன்பாளையத்தில் ரூ.115.24 கோடியில் 1,850 மீட்டர் நீளத்திற்கு மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பாலத்தினால் இந்த பகுதியில் உள்ள 3 சந்திப்புகளில் போக்குவரத்து நெரிசல் குறைக்கப்படும். தற்போது 60 சதவீதம் பணிகள் நிறைவடைந்து உள்ளது. மேம்பால பணியை விரைந்து முடிப்பதுடன், சர்வீஸ் சாலை அமைக்க தேவைப்படும் இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிடவும், குடிநீர் குழாய்களை இடமாற்றம் செய்திடவும், தேவையான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட துறையினர் மேற்கொள்ள வேண்டும். மேலும் ஜி.என்.மில்ஸ் சந்திப்பு ரூ.41.88 கோடியில் மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. இந்த 2 மேம்பாலங்களும் விரைந்து கட்டப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.