சத்துணவு ஊழியர் சங்கத்தினர் போராட்டம்
சத்துணவு ஊழியர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வள்ளியூர் (தெற்கு):
வள்ளியூர் ஊராட்சி ஒன்றியத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் ரத்த கையெழுத்து இயக்க போராட்டம் நடந்தது. ஆனால் இதற்கு போலீசார் அனுமதி மறுத்ததால் 100-க்கும் மேற்பட்டோர் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர். சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் நிர்ணயிக்க வேண்டும். ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும. காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். சத்துணவு மையங்கள் மூலம் காலை உணவு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.
இதேபோல் அம்பையில் சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பில் போராட்டம் நடந்தது. சங்க தலைவர் முத்துலட்சுமி தலைமை தாங்கினார். செயலர் கனகா கோரிக்கை விளக்கவுரையாற்றினார். அரசு ஊழியர் சங்க மாவட்ட துணைத் தலைவர் சகுந்தலா, தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க தலைவர் ராஜகோபால் ஆகியோர் வாழ்த்தி பேசினர். தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கம் மாவட்ட செயலர் மகபூப்ஷா சிறப்புரையாற்றினார். முடிவில், பொருளாளர் பேபி நட்சத்திரம் நன்றி கூறினார்.