பழையனூர் அருேக தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியது


பழையனூர் அருேக தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியது
x

கிருதுமால் நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதால் பழையனூர் அருகே தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியது. இதனால் அந்த வழியாக போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளதால் மாணவ-மாணவிகள், கிராம மக்கள் அவதிப்படுகிறார்கள்.

சிவகங்கை

திருப்புவனம்,

கிருதுமால் நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதால் பழையனூர் அருகே தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியது. இதனால் அந்த வழியாக போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளதால் மாணவ-மாணவிகள், கிராம மக்கள் அவதிப்படுகிறார்கள்.

கிருதுமால் நதி

திருப்புவனம் யூனியனை சேர்ந்தது பழையனூர். பழையனூரில் இருந்து ஓடாத்தூருக்கு கிருதுமால் நதியின் குறுக்கே தரைப்பாலம் ஒன்று செல்கிறது. இந்த தரைப்பாலத்தின் நடுப்பகுதி பள்ளம் போல் காணப்படும். பெரும் மழைக்காலங்களிலும் வைகை ஆற்றில் தண்ணீர் அதிகமாக வரும் காலங்களில், இந்த தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி கிருதுமால் நதியில் தண்ணீர் செல்லும்.

இந்த தரைப்பாலம் வழியாக 16-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்க பழையனூருக்கு வந்து செல்வார்கள். மேலும் இந்த கிராமங்களில் உள்ள மாணவ-மாணவிகள் பழையனூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிக்கு தான் படிக்க வரவேண்டும்.

தரைப்பாலம் மூழ்கியது

மதுரை-பெரியார் பஸ் நிலையத்தில் இருந்து திருப்புவனம், பழையனூர் வழியாக ஓடாத்தூர், எஸ்.வாகைகுளத்துக்கு அரசு டவுன் பஸ் சென்று கொண்டிருந்தது. பள்ளி மாணவ-மாணவிகள் இந்த அரசு டவுன் பஸ்சில் ஏறி பழையனூர் வருவார்கள். அருகில் உள்ள மாணவ, மாணவிகள் நடந்து வருவார்கள்.

தற்சமயம் தொடர் மழையாலும், வைகையில் வந்த தண்ணீராலும் சில நாட்களாக கிருதுமால் நதியில் தண்ணீர் அதிகமாக வந்து கொண்டிருக்கிறது. தரைப்பாலத்தில் 4 அடி உயரத்திற்கு மேல் தண்ணீர் செல்கிறது. இதனால் கடந்த சில தினங்களாக அரசு டவுன்பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. மாணவ-மாணவிகள் ஆபத்தான நிலையில் பழையனூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. தரை பாலத்தில் தண்ணீர் அதிகமாக வரும் நேரங்களில் மாணவ-மாணவிகள் தங்களது இடுப்பு அளவிற்கு மேல் நனைந்தபடி பள்ளிக்கு வந்து செல்ல வேண்டிய நிலை இருந்து வருகிறது. சில மாணவர்கள் தாங்கள் கொண்டுவரும் புத்தக பையை தலையில் சுமந்தபடி வந்து செல்வார்கள்.

உயர்மட்ட பாலம் கட்ட வேண்டும்

சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை தோளில் வைத்து தூக்கியபடி வந்து தரைப்பாலத்தை கடந்து விட்டு செல்வார்கள். இது தவிர சிறிய மழை பெய்தாலும் இந்த பாலத்தின் நடுவில் உள்ள பள்ளத்தில் அதிக அளவில் தண்ணீர் தேங்கி இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்துகிறது.

இது குறித்து இப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் கூறும் போது:-கிருதுமால் நதியின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்டினால் மட்டுமே இந்த பகுதியில் உள்ள 16 கிராம மக்களுக்கு விடிவு காலம் பிறக்கும். அதுவரை சிறிய மழை பெய்தால் கூட இதே நிலைதான் நீடிக்கும் என்றார்.


Related Tags :
Next Story